எடுத்த எடுப்புலயே 2 விக்கெட் காலி.. ஆஸி., ஃபாஸ்ட் பவுலர்களின் வேகத்தை சமாளிக்குமா நியூசிலாந்து..?

By karthikeyan VFirst Published Dec 13, 2019, 4:15 PM IST
Highlights

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடந்துவருகிறது. 
 

கடந்த 11ம் தேதி தொடங்கி நடந்துவரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, வழக்கம்போலவே லபுஷேனின் அபாரமான பேட்டிங்கால் 416 ரன்களை எட்டியது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் 9 ரன்களில் ஆட்டமிழக்க, நன்றாக ஆடிய வார்னர், வாக்னரின் அபாரமான கேட்ச்சால் 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் லபுஷேனும் ஸ்மித்தும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். ஆனால் ஸ்மித் 43 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ச்சியாக நன்றாக ஆடிய லபுஷேன், தனது ஹாட்ரிக் சதத்தை பதிவு செய்தார். சதத்திற்கு பின்னரும் சிறப்பாக ஆடிய லபுஷேன் 143 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார். டிம் பெய்ன், கம்மின்ஸ், மேத்யூ வேட் ஆகியோர் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து இரண்டாம் நாளான  இன்றைய(13ம்தேதி) ஆட்டத்தின் மூன்றாவது செசனில் முதல் இன்னிங்ஸை தொடங்கியது நியூசிலாந்து அணி. தொடக்க வீரர்கள் டாம் லேதம் மற்றும் ஜீட் ராவல் ஆகிய இருவரும் களத்திற்கு வந்தனர். ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே டாம் லேதம் ரன்னே எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஹேசில்வுட் வீசிய அடுத்த ஓவரிலேயே ஜீட் ராவல் போல்டாகி வெளியேறினார். 

இதையடுத்து கேப்டன் கேன் வில்லியம்சனும் அனுபவ வீரர் ரோஸ் டெய்லரும் இணைந்து ஆடிவருகின்றனர். இந்த ஜோடி அனுபவமான ஜோடி என்பதால், இவர்கள் கண்டிப்பாக பெரிய இன்னிங்ஸ் ஆடினால்தான் நியூசிலாந்து அணியை காப்பாற்ற முடியும். 

ஆனால் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு ஒத்துழைக்கும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ் ஆகிய மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்களை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல. 
 

click me!