நியூசிலாந்தை மரண பீதியாக்கிய சைனியின் பேட்டிங்.. ஜடேஜாவின் கடும் போராட்டம் வீண்.. தொடரை வென்றது நியூசிலாந்து

By karthikeyan VFirst Published Feb 8, 2020, 3:51 PM IST
Highlights

2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 2-0 என தொடரை வென்றது. 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான டி20 தொடரை 5-0 என இந்திய அணி, நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து வென்றது. இதையடுத்து ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, இன்று நடந்த இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று 2-0 என தொடரை வென்றது. 

ஆக்லாந்தில் இன்று நடந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, நியூசிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் கப்டிலும் நிகோல்ஸும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தபோதிலும் பின்னால் வந்த வீரர்கள் அதை பயன்படுத்தி கொள்ளவில்லை. முதல் விக்கெட்டுக்கு 93 ரன்களை அவர்கள் சேர்த்தனர். நிகோல்ஸ் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் டாம் பிளண்டெல் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்து, சதத்தை நோக்கி ஆடிய கப்டில், 79 ரன்களில் ரன் அவுட்டானார். 

இதையடுத்து டெய்லர் மட்டும் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் கேப்டன் டம லேதம், ஜிம்மி நீஷம், காலின் டி கிராண்ட் ஹோம், சாப்மேன், டிம் சௌதி ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் மளமளவென ஆட்டமிழந்தனர். டெய்லர் மட்டும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்ததுடன், அடித்து ஆடி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார். அவரது பொறுப்பான பேட்டிங்கால், 42வது ஓவருக்கு பின்னர் விக்கெட்டையே இழக்காத நியூசிலாந்து அணி, 50 ஓவரில் 273 ரன்களை அடித்தது. 

274 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா அபாரமாக தொடங்கினார். முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகளை விளாசி அருமையாக தொடங்கினார். மயன்க் அகர்வால் 3 ரன்களில் வெளியேறினார். ஆனால் பிரித்வி ஷா அருமையாக ஆடி பவுண்டரிகளாக விளாசினார். 6 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் அடித்த பிரித்வி ஷா, 19 பந்தில் அடித்த 24 ரன்களையுமே பவுண்டரிகளின் மூலம் பெற்று அத்துடன் ஆட்டமிழந்தார். தனக்கு கிடைத்த நல்ல ஸ்டார்ட்டை பெரிய இன்னிங்ஸாக மாற்ற தவறினார். 

இதையடுத்து கோலி 15 ரன்களிலும் ராகுல் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் பொறுப்புடன் ஆடி ஸ்கோரை உயர்த்தினார் ஷ்ரேயாஸ் ஐயர். கேதர் ஜாதவ் 27 பந்தில் வெறும் 9 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த ஜடேஜா, ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த ஐயர், 52 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் போட்டி இந்திய அணியிடமிருந்து பறிபோனது. இந்திய அணியிம் நம்பிக்கையும் போனது. ஷர்துல் தாகூரும் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் யாருமே சற்றும் எதிர்பாராத விதமாக நவ்தீப் சைனி அருமையாக பேட்டிங் ஆடினார். களத்திற்கு வந்ததும், ஜடேஜாவிற்கு ஒத்துழைப்பு மட்டுமே கொடுத்துக்கொண்டிருந்த சைனி, 44வது ஓவரில் 3 பவுண்டரிகளையும் அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸரையும் விளாசினார். 49 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 45 ரன்களை குவித்து சைனியும் ஆட்டமிழந்தார். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி, கடைசி வரை போட்டியை டீப்பாக எடுத்துச்சென்ற ஜடேஜா, அரைசதம் அடித்தார். கடைசி 4 ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 40 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 47வது ஓவரில் 12 ரன்கள் அடித்தனர். 48வது ஓவரின் ஐந்தாவது பந்தில் சாஹல் ரன் அவுட்டானார். அந்த ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டதால், கடைசி 2 ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் 49வது ஓவரில் ஜடேஜா அவுட்டாகிவிட்டார். இதையடுத்து இந்திய அணி 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் 22 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் 2-0 என ஒருநாள் தொடரை வென்றது. டி20 தொடரை இந்திய அணியிடம் இழந்த நியூசிலாந்து அணி, கேன் வில்லியம்சன் இல்லாமலேயே ஒருநாள் தொடரை வென்றுள்ளது. 
 

click me!