ஜடேஜாவின் போராட்டம் வீண்.. நியூசிலாந்திடம் தோற்று ஃபைனல் வாய்ப்பை இழந்தது இந்தியா

By karthikeyan VFirst Published Jul 10, 2019, 7:43 PM IST
Highlights

உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று இறுதி போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது இந்திய அணி.
 

உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று இறுதி போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது இந்திய அணி.

மான்செஸ்டரில் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 239 ரன்கள் அடித்தது. 

240 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான ரோஹித்தும் கோலியும் தலா ஒரு ரன்னில் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். கோலி அவுட்டான அடுத்த ஓவரிலேயே ராகுலும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். 5 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

அதன்பின்னர் தினேஷ் கார்த்திக் 6 ரன்களில் ஆட்டமிழக்க, ரிஷப்பும் பாண்டியாவும் இணைந்து ஓரளவிற்கு நன்றாக ஆடினர். ஆனால் நிதானமாகவும் பொறுப்பாகவும் ஆடிவந்த ரிஷப் பண்ட், அவசரப்பட்டு பெரிய ஷாட் ஆடி 32 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். ரிஷப் பண்ட் விக்கெட்டுக்கு பிறகு ஹர்திக் பாண்டியாவுடன் தோனி ஜோடி சேர்ந்தார்.

நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவும் அவசரப்பட்டு தூக்கியடித்து 32 ரன்களில் வெளியேறினார். ஸ்பின் பவுலிங்கை பார்த்தால் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்ற தனது ஆர்வத்தை அடக்கமுடியாத ஹர்திக் பாண்டியா, சாண்ட்னெரின் பந்தை சிக்ஸர் அடிக்க முயன்று ஷாட் சரியாக கனெக்ட் ஆகாததால் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் தோனியுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா, மிகுந்த நம்பிக்கையுடன் சற்றும் பயமோ பதற்றமோ இல்லாமல் அடித்து ஆடினார். ஸ்பின் பவுலிங், ஃபாஸ்ட் பவுலிங் என்ற பாகுபாடே பார்க்காமல் அடித்து ஆடினார். நீஷம், சாண்ட்னெரின் பவுலிங்கில் சிக்ஸர்களை விளாசினார். 3 பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். 

42 ஓவர் முடிவில் இந்திய அணி 168 ரன்கள் அடித்தது. கடைசி 8 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 72 ரன்கள் தேவைப்பட்டது. அதன்பின்னர் ஒவ்வொரு ஓவரிலும் ஜடேஜா தேவையான ரன்ரேட்டை ஈடுகட்டுமளவிற்கு அடித்துவந்தார். ஒருமுனையில் ஜடேஜா அடித்து ஆடினாலும் மறுமுனையில் தோனி பெரிய ஷாட் அடிக்கவே முயற்சி செய்யாததால் ரன்ரேட் ஏறிக்கொண்டே இருந்ததால் ஜடேஜா மீது அழுத்தம் அதிகரித்தது.

பெரிய ஷாட் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் 48வது ஓவரின் 5வது பந்தில் ஜடேஜா 77 ரன்களில் ஆட்டமிழக்க, அத்துடன் இந்திய அணியின் நம்பிக்கையும் முடிந்தது. ஏனெனில் தோனி ஆடிய போக்கை பார்க்கையில் அவர் அடித்து வெற்றிகரமாக முடிப்பார் என்ற நம்பிக்கை பெரும்பாலானோருக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. 

தோனி 49வது ஓவரில் 49 ரன்களுக்கு ரன் அவுட்டானார். இதையடுத்து புவனேஷ்வர் குமார் மற்றும் சாஹலை வீழ்த்தி இந்திய அணி 221 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. 
 

click me!