New Zealand vs Bangladesh: 2வது டெஸ்ட்டில் வங்கதேசத்தை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசி., அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jan 11, 2022, 1:29 PM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி, 2வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.
 

வங்கதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்று டெஸ்ட் சாம்பியனாக திகழும் நியூசிலாந்து அணி, சொந்த மண்ணில் வங்கதேசத்திடம் முதல் டெஸ்ட்டில் படுதோல்வி அடைந்தது.

இது நியூசிலாந்து அணிக்கு மரண அடியாக விழுந்தது. எனவே 2வது டெஸ்ட்டில் அந்த மரண அடிக்கு பதிலடி கொடுக்கும் தீவிரத்தில் களம் கண்டது நியூசிலாந்து அணி. கிறிஸ்ட்சர்ச்சில் ஜனவரி 9ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது.

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டாம் லேதம் மற்றும் வில் யங் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 149 ரன்களை குவித்தனர். வில் யங் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் டாம் லேதமும் டெவான் கான்வேவும் இணைந்து மிகச்சிறப்பாக விளையாடினர். சதமடித்த லேதம் இரட்டை சதத்தை நெருங்கிய நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் லேதம் 186 ரன்களுடனும், கான்வே 99 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 349 ரன்களை குவித்திருந்தது.

2ம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கியதும், சதமடித்த கான்வே 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இரட்டை சதத்தை பூர்த்தி செய்த டாம் லேதம் 252 ரன்களை குவித்தார். ரோஸ் டெய்லர் 28 ரன்கள் மட்டுமே அடித்தார். டாம் லேதம் மற்றும் டெவான் கான்வேவின் அபாரமான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 521 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது நியூசிலாந்து அணி.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச வீரர்கள் டிரெண்ட் போல்ட் மற்றும் டிம் சௌதியின் பவுலிங்கில் மளமளவென ஆட்டமிழந்தனர். வங்கதேச அணியில் அதிகபட்சமாக யாசிர் அலி 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நூருல் ஹசன் 41 ரன்கள் அடித்தார். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் அல்லது ரன்னே அடிக்காமல் ஆட்டமிழக்க, வெறும் 126 ரன்களுக்கு சுருண்டது. டிரெண்ட் போல்ட் 5 விக்கெட் வீழ்த்தினார்.

ஃபாலோ ஆன் பெற்ற வங்கதேச அணி, 395 ரன்கள் பின் தங்கிய நிலையில், 3ம் நாளான இன்றைய ஆட்டத்தில் 2வது இன்னிங்ஸை தொடர்ந்தது. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது வங்கதேச அணி. வங்கதேச அணியின் மிடில் ஆர்டர் வீரரான லிட்டன் தாஸ் மட்டும் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸ் முடிவில் 395 ரன்கள் பின்னிலை என்ற நிலையில் இருந்து மீண்டு வந்து ஜெயிப்பது கடினம் என்பது வங்கதேச அணிக்கே தெரியும். அந்தவகையில், 2வது இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வங்கதேச அணி.

இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. எனவே டெஸ்ட் தொடர் 1-1 என சமனடைந்தது.
 

click me!