நியூசிலாந்துக்கு மரண பயத்தை காட்டிய வங்கதேசம்.. ஒருவழியா போராடி வென்ற நியூசிலாந்து

By karthikeyan VFirst Published Jun 6, 2019, 9:54 AM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி போராடி வெற்றி பெற்றது. 

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்று 2 போட்டிகள் நடந்தன. ஒரு போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மற்றொரு போட்டியில் நியூசிலாந்தும் வங்கதேசமும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 49.2 ஓவரில் 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷாகிப் அல் ஹாசன் மட்டும் தான் வங்கதேச அணியில் அரைசதம் அடித்தார். அவர் 64 ரன்களை குவித்தார். தொடக்க வீரர்கள் தமீம் இக்பால், சௌமியா சர்க்கார் ஆகிய இருவரும் முறையே 24 மற்றும் 25 ரன்கள் எடுத்தனர். முஷ்ஃபிகுர் ரஹீம், மஹ்மதுல்லா, மிதுன், சைஃபுதீன் ஆகியோர் ஓரளவிற்கு பங்களிப்பு செய்ய நியூசிலாந்து அணி 244 ரன்களை எட்டியது. 

245 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் கப்டிலும் முன்ரோவும் முறையே 25 மற்றும் 24 ரன்களில் வெளியேறினர். அதன்பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் வில்லியம்சனும் அனுபவ ரோஸ் டெய்லரும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் வங்கதேச பவுலர்கள் திணறினர். 

வில்லியம்சனும் டெய்லரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தனர். வில்லியம்சன் 40 ரன்களில் மெஹிடி ஹசனின் பந்தில் ஆட்டமிழக்க, அதே ஓவரில் டாம் லதாமும் டக் அவுட்டாகி வெளியேறினார். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த டெய்லர், 82 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் நியூசிலாந்து அணி திணறியது. 

அதன்பின்னர் கோலின் டி கிராண்ட் ஹோம், ஜேம்ஸ் நீஷம் மற்றும் ஹென்ரி ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, வங்கதேச அணி, கடைசி வரை வெற்றிக்கு போராடியது. ஆனால் மிட்செல் சாண்ட்னெரும் ஃபெர்குசனும் இணைந்து 48வது ஓவரில் நியூசிலாந்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர். ஈசியாக ஜெயிக்க வேண்டிய போட்டியை ஒருவழியாக போராடி வென்றது நியூசிலாந்து அணி. இந்த வெற்றியின் மூலம் 2 தொடர் வெற்றிகளை பெற்ற நியூசிலாந்து அணி, 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 
 

click me!