படுமோசமா சொதப்பிய பிரித்வி ஷா.. கடைசி வரை போராடிய க்ருணல் பாண்டியா.. இந்தியா ஏ-வை பழிதீர்த்த நியூசிலாந்து ஏ

By karthikeyan VFirst Published Jan 24, 2020, 12:46 PM IST
Highlights

இந்தியா ஏ அணியிடம் முதல் ஒருநாள் போட்டியில் தோற்ற நியூசிலாந்து ஏ அணி, இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றது. 
 

இந்தியா ஏ அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக ஆடிவருகிறது. ஒருநாள் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக நடந்த 2 பயிற்சி போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா ஏ அணி, முதல் ஒருநாள் போட்டியிலும் வென்றது. 

இதையடுத்து இரண்டாவது போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து ஏ அணி 50 ஓவரில் 295 ரன்களை குவித்தது. நியூசிலாந்து ஏ அணியின் தொடக்க வீரர் ராச்சின் ரவீந்திரா ரன்னே அடிக்காமல் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து களத்திற்கு வந்த ஃபிலிப்ஸ், கேப்டன் டாம் ப்ரூஸ் ஆகியோர் சீரான இடைவெளியில் பதின் ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் தொடக்க வீரர் ஜார்ஜ் ஒர்க்கர் நிலைத்து நின்று சிறப்பாக ஆடினார். 

டாம் பிளண்டல் டக் அவுட்டானார். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த ஒர்க்கர், தொடர்ந்து தனது அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதமும் அடித்தார். இதற்கிடையே, மார்க் சாப்மானும் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஒர்க்கருடன் ஜோடி சேர்ந்த ஜிம்மி நீஷம், அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடினார். சதத்திற்கு பின்னர் அதிரடியாக ஆடிய ஒர்க்கர் 144 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 135 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் அதிரடியாக ஆடிய கோல் மெக்கோன்ச்சி அரைசதம் அடித்தார். 56 ரன்களில் அவர் ஆட்டமிழக்க, நீஷம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் அடித்திருந்தார். நியூசிலாந்து ஏ அணி 50 ஓவரில் 295 ரன்களை குவித்தது. 

296 ரன்கள் என்ற மிகவும் சவாலான இலக்குடன் களமிறங்கிய இந்தியா ஏ அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா வெறும் 2 ரன்னில் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பயிற்சி போட்டியில் 100 பந்தில் 150 ரன்களை குவித்து, அதன்விளைவாக இந்திய அணியிலும் இடம்பிடித்த பிரித்வி ஷா, இந்த போட்டியில் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். இதையடுத்து களத்திற்கு வந்த ருதுராஜ் கெய்க்வாட், 17 ரன்களில் நடையை கட்ட, மற்றொரு தொடக்க வீரரான மயன்க் அகர்வாலும் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். 

சூர்யகுமார் யாதவும் 20 ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா ஏ அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. ஆனால் அதன்பின்னர் இஷான் கிஷானும் விஜய் சங்கரும் இணைந்து சிறப்பாக ஆடினர். இருவரும் நன்றாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், இஷான் கிஷான் 44 ரன்களில் ரன் அவுட்டானார். அதன்பின்னர் விஜய் சங்கருடன் இணைந்த க்ருணல் பாண்டியா பொறுப்புடன் ஆடினார். இவர்களும் பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றனர். ஆனால் இந்த ஜோடியையும் நியூசிலாந்து பவுலர்கள் நீண்ட நேரம் நிலைக்கவிடவில்லை. 

விஜய் சங்கர் 41 ரன்களிலும் அக்ஸர் படேல் 21 ரன்களிலும் ஆட்டமிழக்க, க்ருணல் பாண்டியாவிற்கு அழுத்தம் அதிகரித்தது. அரைசதம் அடித்த க்ருணல் பாண்டியா 51 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியா ஏ அணி கடைசியில் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் மட்டுமே அடித்தது. இதையடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து ஏ அணி வெற்றி பெற்றது. 
 

click me!