நல்லா ஆடுனது என்னவோ நான் தான்.. ஆனால் அதுக்கு காரணம் ஜடேஜா.. பேட்டிங்கில் அசத்திய சைனி பகிர்ந்த சுவாரஸ்யம்

By karthikeyan VFirst Published Feb 9, 2020, 12:48 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக பேட்டிங் ஆடிய நவ்தீப் சைனி, தனக்கு ஜடேஜா கூறிய ஆலோசனையை பகிர்ந்துள்ளார். 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்ததால், 3 போட்டிகள் கொண்ட தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இரண்டாவது போட்டியில் நேற்று ஆடியது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, 50 ஓவரில் 273 ரன்கள் அடித்தது. 274 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 153 ரன்களுக்கே, பிரித்வி ஷா, மயன்க் அகர்வால், கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், கேதர் ஜாதவ், ஷர்துல் தாகூர் ஆகிய 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆனாலும் மன உறுதியையும் முயற்சியையும் சற்றும் தளரவிடாத ஜடேஜா, நவ்தீப் சைனியுடன் இணைந்து சிறப்பாக ஆடினார். 

யாருமே சற்றும் எதிர்பாராத விதமாக நவ்தீப் சைனி அருமையாக பேட்டிங் ஆடினார். களத்திற்கு வந்ததும், ஜடேஜாவிற்கு ஒத்துழைப்பு மட்டுமே கொடுத்துக்கொண்டிருந்த சைனி, 44வது ஓவரில் 3 பவுண்டரிகளையும் அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸரையும் விளாசினார். 49 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 45 ரன்களை குவித்து சைனியும் ஆட்டமிழந்தார். 9வது விக்கெட்டுக்கு ஜடேஜாவும் சைனியும் இணைந்து 76 ரன்களை குவித்தனர்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி, கடைசி வரை போட்டியை டீப்பாக எடுத்துச்சென்ற ஜடேஜா, அரைசதம் அடித்தார். ஆனாலும் இந்திய அணி 251 ரன்களுக்கே ஆல் அவுட்டாகிவிட்டதால், 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆனாலும் 32வது ஓவரிலேயே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்ட இந்திய அணி, ஜடேஜா - நவ்தீப் சைனியின் பொறுப்பான பேட்டிங்கால் போட்டியை இறுதிவரை எடுத்துச்சென்றது. 

இந்த போட்டியில் தோற்றிருந்தாலும் நவ்தீப் சைனியின் பேட்டிங் அனைவருக்கும் வியப்பையும் மகிழ்ச்சியையும் அளித்தது. நவ்தீப் சைனியால் பெரிய இன்னிங்ஸ் கூட ஆட முடியும் என்பதை அனைவருக்கும் பறைசாற்றும் விதமாக அமைந்தது அவரது பேட்டிங். 

இந்நிலையில், போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நவ்தீப் சைனி, ஆடுகளம் ஃபிளாட்டாக இருந்ததால் போட்டியை கடைசி வரை டீப்பாக எடுத்துச்சென்றால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. எனவே நானும் ஜடேஜாவும் முடிந்தவரை சிறப்பாக ஆடி இறுதிவரை எடுத்துச்செல்லும் மனநிலையிலும் அதில் உறுதியாகவும் இருந்தோம். பவுண்டரி அடிக்க ஏதுவான பந்தை மட்டும் பவுண்டரி அடி; மற்ற பந்துகளில் சிங்கிள் மட்டுமே ஆடு என்று ஜடேஜா என்னிடம் சொன்னார். மேலும் பொறுமையை இழக்காமல் நிதானமாக ஆடு என்றும் ஜடேஜா அறிவுறுத்தினார். ஜடேஜாவின் அறிவுறுத்தலை பின்பற்றி ஆடினேன் என்று சைனி கூறினார். 
 

click me!