அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணியை கோலி அல்லு தெறிக்கவிட்டது மறந்து போச்சா..? முட்டாள்தனமான முன்னெடுப்பு.. நேதன் லயன் அதிரடி

By karthikeyan VFirst Published Jan 2, 2020, 12:08 PM IST
Highlights

டெஸ்ட் போட்டிகளை நான்கு நாட்களாக குறைப்பது குறித்த ஐசிசி-யின் திட்டத்தை கடுமையாக எதிர்த்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் ஸ்பின்னர் நேதன் லயன்.

டி20 கிரிக்கெட்டின் வருகைக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் மீதான ரசிகர்களின் ஆர்வம் குறைந்துவிட்டது. டெஸ்ட் போட்டிகளை காண ரசிகர்கள் ஸ்டேடியத்திற்கு வருவதும் வெகுவாக குறைந்துவிட்டது. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டை நோக்கி ரசிகர்களை கவர, ஐசிசி-யும் பல நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் பல விதமான சீரிய முயற்சிகளை எடுத்துவருகின்றன.

2019ல் முதல்முறையாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் உலக கோப்பை நடத்தப்படுவதை போல, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் இந்த ஆண்டு முதல் ஆரம்பித்துள்ளது ஐசிசி. இந்த ஆண்டு நடந்த ஆஷஸ் முதல் 2021 வரை அனைத்து அணிகளும் ஆடும் டெஸ்ட் போட்டிகள் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குரியது. 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2021ல் லண்டன் லார்ட்ஸில் நடக்கும் இறுதி போட்டியில் மோதும். டெஸ்ட் போட்டிகள் காலங்காலமாக 5 நாட்கள் நடத்தப்பட்டுவருகின்றன. முன்பெல்லாம் டெஸ்ட் போட்டிகளே மிகவும் பரபரப்பாக இருக்கும். கடைசி நாள் ஆட்டத்தின் கடைசி செசன் வரை மிகவும் விறுவிறுப்பாக நடந்த போட்டிகளெல்லாம் உண்டு.

ஆனால் தற்போது, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய சில அணிகள் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் வலுவான அணிகளாக திகழ்ந்து ஆதிக்கம் செலுத்துவதால், அந்த அணிகள் மற்ற எளிய அணிகளை எளிதாக வீழ்த்திவிடுகின்றன. அதனால் பல போட்டிகள் 4 நாட்களுக்குள்ளாகவே முடிந்துவிடுகின்றன. 

இந்நிலையில்,  2023 முதல் 2031 வரையிலான காலக்கட்டத்தில், ஐசிசி நடத்தும் சாம்பியன்ஷிப்புக்கான டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக குறைத்து நடத்துவது குறித்து ஐசிசி தீவிரமாக ஆலோசனை நடத்திவருகிறது. இப்படி  4 நாட்களாக குறைத்து நடத்தும் பட்சத்தில், அந்த 8 ஆண்டுகளில் நடத்தப்படும் டெஸ்ட் போட்டிகளில் 335 நாட்கள் மீதமாகும் என்பது ஐசிசியின் கருத்து. ஆனால் இது எந்தளவிற்கு சாத்தியப்படும், கிரிக்கெட் வாரியங்கள் ஆதரவளிக்குமா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

4 நாள் டெஸ்ட் நடத்துவது உறுதி கிடையாது. இப்போதுதான் அதுகுறித்த விவாதம் தொடங்கியுள்ளது. ஆனால் அப்படியொரு விவாதம் தொடங்கியதுமே கடுமையாக எதிர்த்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் ஸ்பின்னர் நேதன் லயன். அது முட்டாள்தனமான முன்னெடுப்பு என்று கடுமையாக சாடியுள்ளார் நேதன் லயன்.

இதுகுறித்து பேசிய நேதன் லயன், 4 நாள் டெஸ்ட் முட்டாள்தனமான முன்னெடுப்பு. மிகச்சிறந்த டெஸ்ட் போட்டிகள் எல்லாம் 5ம் நாள் ஆட்டத்தில்தான் முடிவை பெற்றுள்ளன. கடைசி நாளில் பரபரப்பாக முடிந்த பல போட்டிகள் உள்ளன. நான் ஆடிய போட்டிகளில் பல சிறந்த போட்டிகள் 5ம் நாள் தான் முடிந்தன. 

2014ல் ஆஸ்திரேலியா - இந்தியா இடையேயான அடிலெய்டு டெஸ்ட்டில் 5ம் நாள் ஆட்டத்தின் கடைசி அரை மணி நேரம் மிகவும் பரபரப்பாக இருந்தது. அதேபோல 2014ல் தென்னாப்பிரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே கேப்டவுனில் நடந்த டெஸ்ட்டில், போட்டி டிராவாக இரண்டு ஓவர்களே இருந்த நிலையில், 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதுபோன்ற பரபரப்பான போட்டிகள் இருந்துள்ளன. 

இப்போதெல்லாம் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக வடிவமைக்கப்படுவதால், பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் பேட்டிங் செய்கின்றனர். ஆடுகளம் பிரேக் ஆனால்தான் கடைசி நாளில் ஸ்பின் பவுலிங்கிற்கு ஆதரவாக இருக்கிறது. எனவே 4 நாள் டெஸ்ட் போட்டிக்கு நான் மிகப்பெரிய எதிரி. இதை ஐசிசி பரிசீலிக்காது என்று நம்புவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார் நேதன் லயன்.

2014ம் ஆண்டு அடிலெய்டு டெஸ்ட்டை பற்றி நேதன் லயன் குறிப்பிட்டார். அந்த போட்டி மிகவும் சிறந்த டெஸ்ட் போட்டி. கோலியின் தலைமையில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் ஆடியபோது அடிலெய்டில் முதல் போட்டி நடந்தது. அந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் விராட் கோலி சதமடித்தார். முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் வார்னர், ஸ்மித், கிளார்க் ஆகிய மூவரும் சதமடிக்க, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 517 ரன்களை குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதமடித்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 444 ரன்கள் அடித்தது. 

73 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை 290 ரன்களுக்கு டிக்ளேர் செய்து, இந்திய அணிக்கு 364 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. கடைசி நாளில் நிர்ணயிக்கப்பட்ட இந்த கடினமான இலக்கை விரட்டமுடியாது என்று, டிராவை நோக்கி ஆடாமல், விடாமுயற்சியுடன் வெறித்தனமாக இலக்கை விரட்டினார் கோலி. ஒருமுனையில் விக்கெட்டுகள் விக்கெட்டுகள் சரிந்தாலும் அதிரடியாக ஆடி இலக்கை நோக்கி தீவிரமாக சென்ற கோலி, 175 பந்தில் 141 ரன்களை குவித்து இந்திய அணியின் 7வது விக்கெட்டாக வீழ்ந்தார். கோலி அவுட்டாகும்போது இந்திய அணியின் ஸ்கோர் 304. அதன்பின்னர் எஞ்சிய 3 விக்கெட்டுகளையும் இந்திய அணி அடுத்த 11 ரன்களில் அவுட்டாக, இந்திய அணி 315 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. 

கடைசி நாளில் 364 ரன்களெல்லாம் அடிக்க முடியாது என்ற அதீத நம்பிக்கையில், இந்திய அணியை பேட்டிங் ஆடவிட்ட அப்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் அல்லு தெறிக்கவிட்டார் கோலி. தரமான சம்பவம் அது. அதை சுட்டிக்காட்டி 4 நாள் டெஸ்ட்டை எதிர்த்துள்ளார் நேதன் லயன்.
 

click me!