அந்த ஒரேயொரு விஷயத்துக்காக கங்குலியை வெறுக்கிறேன்.. எதிரணி கேப்டன்களை கதறவிடுவாரு..! முன்னாள் கேப்டன் அதிரடி

By karthikeyan VFirst Published Jul 4, 2020, 8:22 PM IST
Highlights

ஒரேயொரு விஷயத்தில் மட்டும், தனக்கு கங்குலியை பிடிக்காது என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். 
 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தான், இந்திய அணியை மறுகட்டமைப்பு செய்து, இளம் வீரர்களை அடையாளம் கண்டு, துடிப்பான அணியை உருவாக்கி, இந்திய அணியை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வெற்றி நடை போடவைத்தவர். 

தலைமை பண்பும், நிர்வாகத்திறனும் மிக்க கங்குலி, சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், தோனி வரை பல சிறந்த வீரர்களுக்கு அவர்களின் ஆரம்பக்கட்டத்தில் ஆதரவாக இருந்து அவர்களை வளர்த்துவிட்டவர். 

கேப்டனாகவும் ஒரு வீரராகவும் இந்திய கிரிக்கெட்டிற்கு பங்களிப்பு செய்த கங்குலி, தற்போது பிசிசிஐ-யின் தலைவராக இருந்து இந்திய கிரிக்கெட்டுக்கு பங்களிப்பு செய்துவருகிறார். 

கங்குலி இந்திய அணியின் கேப்டனாக இருந்த காலக்கட்டத்தில், இந்திய அணிக்கு எதிராக ஆடிய கேப்டன்களில் இங்கிலாந்தின் நாசர் ஹுசைனும் ஒருவர். கங்குலி தலைமையிலான இந்திய அணி மற்றும் நாசர் ஹுசைன் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இடையேயான 2002 நாட்வெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியை கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கமுடியாது. அந்த தொடரை வென்றபோதுதான், கங்குலி டி ஷர்ட்டை கழட்டி சுற்றியது. 

இந்நிலையில், கங்குலி குறித்து பேசியுள்ள நாசர் ஹுசைன், இந்திய அணியை வலுவான அணியாக உருவாக்கியது கங்குலி தான். கங்குலி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்துவது கடினமானது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் உணர்ச்சி மற்றும் வெற்றி வேட்கையை புரிந்த கேப்டன் கங்குலி. கங்குலி மிகவும் ஆக்ரோஷமானவர். அவரை போன்ற வீரர்களையே அவர் அணியிலும் தேர்வு செய்தார். யுவராஜ் சிங், ஹபர்ஜன் சிங் ஆகியோர் கங்குலியை போன்றே களத்தில் ஆக்ரோஷமாகவும் முகத்தை இறுக்கமாகவும் வைத்திருப்பார்கள். ஆனால் களத்திற்கு வெளியே சந்தித்தால் மிகவும் இனிமையானவர் கங்குலி.

கங்குலிக்கு எதிராக ஆடுவதில், அவரை ஒரு விஷயம் மட்டும் தான் செம கடுப்பு. ஒரேயொரு விஷயத்திற்காக அவரை நான் வெறுக்கிறேன். டாஸ் போடுவதற்கு சரியான நேரத்தில் வரவே மாட்டார் கங்குலி. ஒவ்வொரு முறையும் தாமதமாகத்தான் வருவார். கங்குலி, மணி பத்தரை ஆகிவிட்டது; டாஸ் போடணும் வாப்பா என்று கதறவிடுவார் என்று நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். 

கங்குலி மீது இதே குற்றச்சாட்டை ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

click me!