ஒரு தடவை இரண்டு தடவை இல்ல.. இதே வேலையா போச்சு.. அம்பயர் மீது செம கடுப்பான முரளி விஜய்.. அப்புறம் என்னாச்சுனு பாருங்க

By karthikeyan VFirst Published Dec 10, 2019, 10:32 AM IST
Highlights

ரஞ்சி டிராபியில் கர்நாடக அணிக்கு எதிரான போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் டீ பிரேக்கிற்கு முன்னதாக பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறின. 

முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி நேற்று தொடங்கி நடந்துவருகிறது. நிறைய போட்டிகள் நேற்று தொடங்கின. அதில், தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணிகளுக்கு இடையேயான போட்டியும் ஒன்று.

விஜய் சங்கர் தலைமையிலான தமிழ்நாடு அணிக்கும் கருண் நாயர் தலைமையிலான கர்நாடக அணிக்கும் இடையேயான போட்டி திண்டுக்கல் என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற கர்நாடக அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

கர்நாடக அணியின் தொடக்க வீரரும் சீனியர் வீரருமான மயன்க் அகர்வால் 43 ரன்கள் அடித்தார். தொடக்க வீரர் தேகா நிஸ்சல் மற்றும் கேப்டன் கருண் நாயர் ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். ஆனால் இளம் வீரர்கள் தேவ்தத் படிக்கல் மற்றும் பவன் தேஷ்பாண்டே ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். படிக்கல் 78 ரன்களை குவித்தார். பவன் தேஷ்பாண்டே 65 ரன்கள் அடித்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் கர்நாடக அணி 6 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் அடித்துள்ளது. 

தமிழ்நாடு அணியின் சார்பில் சித்தார்த் மணிமாறன் 2 விக்கெட்டுகளையும் அஷ்வின், கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் மற்றும் பாபா அபரஜித் ஆகிய மூவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 

முதல் நாள் ஆட்டத்தில் டீ பிரேக்கிற்கு முந்தைய ஓவரான 70வது ஓவரை அஷ்வின் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட தேஷ்பாண்டே, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை அடிக்க முயன்றார். அந்த பந்தை பிடித்த விக்கெட் கீப்பர் ஜெகதீஷன், பேட்டில் பட்டதாக அம்பயரிடம் அப்பீல் செய்தார். ஆனால் அம்பயர் நிதின் பண்டிட் அவுட் கொடுக்கவில்லை. ஆனால் அதற்கு அஷ்வின் பெரிதாக அப்பீல் செய்யவில்லை. ஜெகதீஷனின் நம்பிக்கையான அப்பீலை கண்ட பிறகே அவரும் அப்பீல் செய்தார். ஏனெனில் விக்கெட் கீப்பருக்குத்தான் பேட்டில் பட்டதா என்பது தெளிவாக தெரியும். அந்த சம்பவம் ஒருவழியாக முடிந்தது. 

அதற்கடுத்து மீண்டும் அந்த ஓவரின் 5வது பந்தில் அதேபோன்று மீண்டும் ஒரு விக்கெட் கீப்பிங் கேட்ச்சிற்கு தமிழ்நாடு வீரர்கள் அப்பீல் செய்தனர். ஆனால் இந்த முறை ஜெகதீஷன் மட்டுமல்ல, ஒட்டுமொத்த வீரர்களுமே அப்பீல் செய்தனர். அந்தளவிற்கு தெளிவாக அது அவுட் என தெரிந்ததால் நம்பிக்கையுடன் அப்பீல் செய்தனர். ஆனால் அம்பயர் நிதின் பண்டிட் மறுபடியும் அவுட் கொடுக்காமல் அமைதி காத்தார். அதனால் செம கடுப்பான முரளி விஜய், அம்பயர் நிதின் பண்டிட்டிடம் வாக்குவாதம் செய்தார். 

பின்னர் லெக் அம்பயர் வந்து, முரளி விஜயை ஆசுவாசப்படுத்தி அனுப்பிவைத்தார். அனுபவ வீரரான முரளி விஜய், கள நடுவரிடம் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்தது கொஞ்சம் அதிர்ச்சியான விஷயம்தான். ஆனால் அவுட்டுக்கு அவுட் கொடுக்கவில்லையென்றால், அழுத்தமான சில நேரங்களில் வீரர்கள் தங்களது பொறுமையை இழந்து ஆக்ரோஷமாக நடந்துகொள்வது வழக்கம்தான். ஆனால் கள நடுவரிடம் வாக்குவாதம் செய்யக்கூடாது என்பது விதி. எனவே அதனடிப்படையில், முரளி விஜய்க்கு போட்டி ஊதியத்தில் 10 சதவிகிதத்தை அபராதமாக விதித்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். 

முதல் நாள் ஆட்டத்தில் நிறைய முடிவுகள் தமிழ்நாடு அணிக்கு எதிராக இருந்ததாக தெரிகிறது. அதன் விளைவாகத்தான் முரளி விஜய் பொறுமையை இழந்துள்ளார். 
 

click me!