சின்ன சின்ன பசங்கலாம் என்ன போடு போடுறாங்க.. கேரளாவை அடித்து துவம்சம் செய்த மும்பை அணி அபார வெற்றி

By karthikeyan VFirst Published Oct 15, 2019, 11:51 AM IST
Highlights

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்கிறது என்பதை தற்போதைய இளம் தலைமுறையினரின் அபாரமான திறமையின் மூலமே தெரிந்துகொள்ள முடிகிறது. 
 

விஜய் ஹசாரே தொடரில் மும்பை மற்றும் கேரளா அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேரளா அணி 48.4 ஓவரில் 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் எந்த வீரருமே சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லை. கேப்டன் உத்தப்பா தான் அதிகபட்சமாக 43 ரன்கள் அடித்தார். 

200 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ஆடிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஆதித்ய தரே ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக ஆடினர். இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து கேரள அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கினர். ஆதித்ய தரே அரைசதம் அடிக்க, ஜெய்ஸ்வால் அபாரமாக ஆடி சதமடித்தார். முதல் விக்கெட்டுக்கே இருவரும் இணைந்து 195 ரன்களை குவித்தனர். 

வெற்றிக்கு வெறும் 5 ரன்களே தேவைப்பட்ட நிலையில், ஜெய்ஸ்வால் 122 ரன்களில் விஷ்ணு வினோத்தின் பந்தில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் 67 ரன்களில் ஆதித்ய தரேவும் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் 39வது ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. 

வெறும் 17 வயதே ஆன இளம் வீரர் ஜெய்ஸ்வாலின் பேட்டிங் அபாரமானது. இடது கை பேட்ஸ்மேனான அவர் அபாரமாக ஆடி சதமடித்து அசத்தினார். அவரது பொறுப்பான பேட்டிங்கால் மும்பை அணியின் வெற்றி எளிதானது. 
 

click me!