உலக கோப்பை ஃபைனல் சர்ச்சை எதிரொலி.. அதிரடியாக விதியை மாற்றிய ஐசிசி

By karthikeyan VFirst Published Oct 15, 2019, 10:10 AM IST
Highlights

2019 உலக கோப்பை இறுதி போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்ட விதம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சூப்பர் ஓவரும் டையானால் பவுண்டரிகளின் அடிப்படையில் முடிவை தீர்மானிக்கும் விதி ரத்து செய்யப்பட்டு, புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது ஐசிசி. 

2019 உலக கோப்பை இறுதி போட்டி மாதிரியான, உச்சகட்ட பரபரப்பான ஒரு நாக் அவுட் போட்டியை இதுவரை பார்த்திருக்க முடியாது. இனிமேல் பார்க்கவும் முடியாது என உறுதியாக கூறலாம். அந்தளவிற்கு மிகவும் பரபரப்பான போட்டி அது. 

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் சீட் நுனியில் அமரவைத்த போட்டி அது. முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 241 ரன்கள் அடித்தது. 242 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணியை சரியாக 241 ரன்களில் நியூசிலாந்து அணி சுருட்டியதால், போட்டி டை ஆனது. இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. யாருமே எதிர்பார்த்திராத வகையில், சூப்பர் ஓவரும் டை ஆனது. 

இரு அணிகளுமே அபாரமாக ஆடி கடுமையாக போராடின. ஆனால் சூப்பர் ஓவரும் டை ஆனதால், ஐசிசி விதிப்படி, அந்த போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்பதன் அடிப்படையில் இங்கிலாந்து அணி உலக கோப்பையை வென்றது. நியூசிலாந்து அணி கோப்பையை வெல்லவில்லை என்றாலும், அந்த அணி தோற்கவில்லை என்பதுதான் உண்மை. ஐசிசி விதிப்படி இங்கிலாந்து உலக கோப்பையை வென்றிருந்தாலும், தார்மீக அடிப்படையில் அந்த கோப்பை இரு அணிகளுக்குமே சொந்தம்தான். 

என்னதான் நியூசிலாந்து அணி அபாரமாக ஆடி, கடுமையாக போராடி உலக கிரிக்கெட் ரசிகர்களின் உள்ளங்களை வென்றிருந்தாலும், கோப்பை இங்கிலாந்திடம்தானே உள்ளது. கோப்பையை தூக்கமுடியவில்லை என்பது நியூசிலாந்து அணிக்கு பெரிய ஏமாற்றம்தான். 

இறுதி போட்டியில் பவுண்டரிகள் எண்ணிக்கையின் அடிப்படையில், முடிவை தீர்மானித்ததற்கு முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் அதிருப்தி தெரிவித்தனர். அந்த விதியை கண்டிப்பாக மாற்றியே தீர வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஏனெனில் உலக கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரில் இறுதி போட்டியின் முடிவை பவுண்டரியை வைத்து தீர்மானிப்பது சரியாக இருக்காது என்று அனைவருமே எதிர்ப்பு தெரிவித்ததோடு, அந்த விதியை மாற்ற வேண்டும் என்று ஐசிசிக்கு கோரிக்கையும் விடுத்தனர். 

இந்நிலையில், ஐசிசி அந்த விதியை மாற்றியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் போட்டி டை ஆனால், சூப்பர் ஓவர் வீசப்படும். சூப்பர் ஓவரும் டையானால் போட்டி டை தான். ஆனால் ஐசிசி தொடர்களில் நாக் அவுட் போட்டிகளில் போட்டியும் டையாகி, சூப்பர் ஓவரும் டையானால், அடுத்த சூப்பர் ஓவர் வீசப்படும். அதுவும் டையானால் அடுத்த சூப்பர் வீசப்படும். அதாவது போட்டிக்கும் முடிவு கிடைக்கும் வரை சூப்பர் வீசப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. 
 

click me!