இந்திய அணியின் மிகப்பெரிய சொத்து அஷ்வின்.. சர்டிஃபிகேட் கொடுத்த முன்னாள் ஜாம்பவான்

By karthikeyan VFirst Published Oct 14, 2019, 4:57 PM IST
Highlights

ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டு விட்ட அஷ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே ஆடிவருகிறார். டெஸ்ட் அணியிலும் அண்மைக்காலமாக வெளிநாட்டு தொடர்களில் அஷ்வின் ஓரங்கட்டப்படுகிறார். 
 

வெஸ்ட் இண்டீஸில் நடந்த அந்த அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் அஷ்வின் ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை. இந்திய டெஸ்ட் அணியின் பிரைம் ஸ்பின்னரான அஷ்வினை அணியில் சேர்க்காததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் வெளிநாடுகளில் அஷ்வினை இந்திய அணியின் பிரைம் ஸ்பின்னராக பார்க்கவில்லை என்று கேப்டன் கோலி விளக்கமளித்தார். 

இதன்மூலம் இந்தியாவில் ஆடும் தொடர்களில் மட்டுமே அஷ்வினை பிரைம் ஸ்பின்னராக பார்ப்பதாக கோலி தெரிவித்தார். இந்தியாவில் நடந்துவரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அஷ்வின் ஆடிவருகிறார். முதல் போட்டியில் மொத்தமாக 8 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், இரண்டாவது போட்டியில் எப்போதெல்லாம் இந்திய அணிக்கு விக்கெட் தேவைப்பட்டதோ அப்போதெல்லாம் விக்கெட்டை வீழ்த்தி கொடுத்தார். இரண்டாவது போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், இரண்டு போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய பந்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் டாப் 5 இடங்களில் இடம்பிடித்த ஒரே ஸ்பின்னர், விரைவில் 350 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் ஆகிய சாதனைகளையும் படைத்தார். 

அஷ்வின் இந்திய அணியின் மிகப்பெரிய சொத்து என அனில் கும்ப்ளே புகழ்ந்துள்ளார். ஐபிஎல்லில் கடந்த இரண்டு சீசன்களாக பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்துவரும் அஷ்வினை, அடுத்த சீசனில் பஞ்சாப் அணி கழட்டிவிட இருந்தது. ஆனால் பஞ்சாப் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கும்ப்ளே தேர்வு செய்யப்பட்ட பிறகு, அஷ்வின் பஞ்சாப் அணியில் தொடர்வார் என்பது உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில் அஷ்வின் குறித்து பேசியுள்ள அனில் கும்ப்ளே, அஷ்வின் மிகச்சிறந்த வீரர். டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக விரைவில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது மிகப்பெரிய சாதனை. அஷ்வின் வெறும் பவுலர் மட்டுமல்ல. அவர் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர். இந்திய அணியின் மிகப்பெரிய சொத்து என கும்ப்ளே புகழ்ந்துள்ளார். 
 

click me!