பாண்டியா பிரதர்ஸ் படுமோசம்; பொல்லார்டும் கைவிட்டார்..! கடைசிவரை மும்பை இந்தியன்ஸை கன்ட்ரோலில் வைத்த சிஎஸ்கே

By karthikeyan VFirst Published Sep 19, 2020, 9:42 PM IST
Highlights

சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் போட்டியில் அந்த அணிக்கு வெற்றி இலக்காக 163 ரன்களை நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
 

ஐபிஎல் 13வது சீசனின் முதல் போட்டி அபுதாபியில் மும்பை இந்தியன்ஸூக்கும் சிஎஸ்கேவுக்கும் இடையே நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, மும்பை இந்தியன்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

மும்பை இந்தியன்ஸின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் டி காக்கும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 48 ரன்களை சேர்த்தனர். ரோஹித் 12 ரன்களில் பியூஷ் சாவ்லாவின் சுழலில் விழ, அதற்கடுத்த ஓவரில் சாம் கரனின் பந்தில் டி காக் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சூர்யகுமாரும் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷானுக்கு பதிலாக சவுரப் திவாரி எடுக்கப்பட்டிருந்தார். கடந்த சீசனில் ஆடாத சவுரப் திவாரி, தனக்கு கிடைத்த கம்பேக் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஆடி ஸ்கோர் செய்தார். 31 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 42 ரன்கள் அடித்து ஜடேஜாவின் பந்தில் ஆட்டமிழந்தார். திவாரி தூக்கியடித்த பந்தை லாங் ஆன் திசையில் பவுண்டரி லைனில் அருமையாக கேட்ச் பிடித்தார் டுப்ளெசிஸ்.

இதையடுத்து ஹர்திக் பாண்டியா 14 ரன்களிலும் க்ருணல் பாண்டியா 3 ரன்களிலும் ஆட்டமிழக்க, பொல்லார்டு மட்டும் களத்தில் நின்று மும்பை இந்தியன்ஸூக்கு நம்பிக்கையளித்தார். அவர் டெத் ஓவரில் பெரிய ஷாட்டுகளை ஆடி ஸ்கோர் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் 18 ரன்களில் லுங்கி இங்கிடியின் பந்தில் ஆட்டமிழக்க, பாட்டின்சன் 11 ரன்கள் அடித்து அவரும் இங்கிடியின் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 20 ஒவரில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் அடித்தது. ரோஹித் மற்றும் டி காக்கின் அதிரடியால் 4 ஓவரில் 48 ரன்களை குவித்து நல்ல தொடக்கத்தை பெற்ற மும்பை இந்தியன்ஸை, அவர்கள் விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, பாண்டியா பிரதர்ஸ், பொல்லார்டு என யாரையுமே அடித்து ஆடவிடாமல் கடைசிவரை கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்து 162 ரன்களுக்கு சுருட்டியது சிஎஸ்கே.

163 ரன்கள் என்ற ரெண்டுங்கெட்டான் இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்துள்ளது. இது கடினமான இலக்கும் அல்ல; அதேவேளையில் எளிதான இலக்கும் அல்ல. மும்பை இந்தியன்ஸில் பும்ரா, டிரெண்ட் போல்ட் என்ற டாப் ஃபாஸ்ட் பவுலர்கள் இருப்பதால், சிஎஸ்கே சுதாரிப்பாக ஆட வேண்டும். 
 

click me!