
ஐபிஎல் 15வது சீசனில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதிய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி 2 மாற்றங்களுடனும், சிஎஸ்கே அணி அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடனும் களமிறங்கின. மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்காலத்தை கருத்தில்கொண்டு பொல்லார்டுக்கு பதிலாக தென்னாப்பிரிக்க இளம் வீரர் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸை ஆடும் லெவனில் எடுத்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ட்ரிஸ்டான் ஸ்டப்ஸ், ராமன் தீப் சிங், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், குமார் கார்த்திகேயா, ரித்திக் ஷோகீன், ஜஸ்ப்ரித் பும்ரா, ரிலே மெரிடித்.
சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பாதி ராயுடு, மொயின் அலி, ஷிவம் துபே, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ட்வைன் பிராவோ, மஹீஷ் தீக்ஷனா, சிமர்ஜீத் சிங், முகேஷ் சௌத்ரி.
முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே இன்னிங்ஸின் 2வது பந்திலேயே ஆட்டமிழந்தார். மும்பை வான்கடேவில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டிருந்ததால் முதல் 2 ஓவர்களுக்கு டி.ஆர்.எஸ் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதைப்பயன்படுத்தி எல்பிடபிள்யூவுக்கான பந்தை வீசினார் டேனியல் சாம்ஸ். டி.ஆர்.எஸ் எடுக்க முடியாது என்பதால் அம்பயர் அவுட் கொடுத்தால் பேட்ஸ்மேன் வெளியேறித்தான் ஆகவேண்டும் என்ற வாய்ப்பை பயன்படுத்தி, 2வது பந்திலேயே மிகக்கடுமையாக அப்பீல் செய்தனர் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள். அம்பயரும் டெவான் கான்வேவுக்கு அவுட் கொடுத்துவிட்டார். ஆனால் அந்த பந்து லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே போயிருக்கும். டி.ஆர்.எஸ் இல்லாததால், அதிருப்தியுடன் நடையை கட்டினார் கான்வே.
அதே ஓவரில் மொயின் அலியும் அவுட்டாக, பும்ரா வீசிய 2வது ஓவரில் உத்தப்பாவும், சாம்ஸ் வீசிய இன்னிங்ஸின் 4வது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட்டும்(7), பவர்ப்ளேயின் கடைசி ஓவரான 6வது ஓவரில் அம்பாதி ராயுடுவும்(10) ஆட்டமிழக்க, பவர்ப்ளேயில் 5 விக்கெட்டுகளை இழந்தது சிஎஸ்கே அணி.
அதன்பின்னரும் ஷிவம் துபே(10), பிராவோ(12), சிமர்ஜீத் சிங்(2) ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்ற தோனி 36 ரன்கள் அடித்து, சிஎஸ்கே அணி 97 ரன்களையாவது எட்ட உதவினார். 97 ரன்களுக்கு சிஎஸ்கே அணி ஆல் அவுட்டானது.
98 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய மும்பை அணி, இஷான் கிஷன், ரோஹித் சர்மா, ஸ்டப்ஸ் மற்றும் சாம்ஸ் ஆகிய நால்வரின் விக்கெட்டுகளை பவர்ப்ளேயிலேயே இழந்தது. அதன்பின்னர் திலக் வர்மாவும் டிம் டேவிட்டும் இணைந்து 15வது ஓவரில் இலக்கை அடித்து போட்டியை முடித்தனர். மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.