#PSL இஸ்லாமாபாத் அணியை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறிய முல்தான் அணி..! முதல் எலிமினேட்டரில் பெஷாவர் அணி வெற்றி

By karthikeyan VFirst Published Jun 22, 2021, 3:05 PM IST
Highlights

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் தொடரின் தகுதிச்சுற்று போட்டியில் இஸ்லாமாபாத் அணியை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது முல்தான் சுல்தான்ஸ் அணி.
 

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தகுதிச்சுற்று போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ஓவரில் 180 ரன்களை குவித்தது.

முல்தான் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான முகமது ரிஸ்வான் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாக, மற்றொரு தொடக்க வீரரான ஷான் மசூத் 25 ரன் அடித்தார். ரிலீ ரூசோ டக் அவுட்டானார். 3ம் வரிசையில் ஆடிய சொஹைப் மக்சூத் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். மக்சூத் 59 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் சார்லஸ் அதிரடியாக ஆடி 21 பந்தில் 41 ரன்களையும், குஷ்தில் ஷா 22 பந்தில் 42 ரன்களையும் விளாச 20 ஓவரில் 180 ரன்களை குவித்தது.

181 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இஸ்லாமாபாத் அணியில் காலின் முன்ரோ ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாக, அக்லக்(10), கேப்டன் ஷதாப் கான்(0), ஆசிஃப் அலி(1), இஃப்டிகார் அகமது(16) என ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 40 பந்தில் 70 ரன்களை குவித்தார். ஆனாலும் அவருக்கு மறுமுனையில் பேட்ஸ்மேன்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்காததால் 19 ஓவரில் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இஸ்லாமாபாத் அணி.

இதையடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முல்தான் சுல்தான்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறியது. நேற்று நடந்த முதல் எலிமினேட்டர் போட்டியில் கராச்சி கிங்ஸை வீழ்த்தி பெஷாவர் ஸால்மி அணி வெற்றி பெற்றது.

எனவே 2வது எலிமினேட்டர் போட்டியில், தகுதிச்சுற்றில் தோற்ற இஸ்லாமாபாத் அணியும், முதல் எலிமினேட்டரில் ஜெயித்த பெஷாவர் அணியும் மோதும். அதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் முல்தான் சுல்தான்ஸை எதிர்கொள்ளும்.
 

click me!