சுரேஷ் ரெய்னாவை மீண்டும் இந்திய அணியில் எடுக்காதது ஏன்..? அதுக்கு காரணமானவரே சொன்ன அதிரடி விளக்கம்

By karthikeyan VFirst Published May 7, 2020, 9:18 PM IST
Highlights

இந்திய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் வீரராக திகழ்ந்த சுரேஷ் ரெய்னா, 2018ல் ஓரங்கப்பட்ட பின்பு, இதுவரை மீண்டும் அணியில் இடம்பிடிக்கவேயில்லை. அதற்கான காரணத்தை பார்ப்போம். 
 

தோனி தலைமையிலான இந்திய அணியில் நட்சத்திர வீரராக ஜொலித்தவர் ரெய்னா. தோனியின் வலதுகரமாக திகழ்ந்தார் என்றே கூற வேண்டும். இந்திய அணிக்காக 226 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5615 ரன்களை குவித்துள்ள ரெய்னா, 18 டெஸ்ட் மற்றும் 78 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். 

2011ல் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றபோது, அந்த அணியில் முக்கிய பங்காற்றியவர் ரெய்னா. குறிப்பாக முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் அபாரமாக ஆடினார். காலிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த முக்கிய காரணமாக திகழ்ந்த ரெய்னா, அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக ஆடினார். அவரது இந்த இரண்டு சிறப்பான இன்னிங்ஸ்களும் தான் இந்திய அணி, இறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கு காரணமே.

ஃபீல்டிங்கிலும் மிரட்டக்கூடியவர். ஜாண்டி ரோட்ஸுக்கே பிடித்த ஃபீல்டர் ரெய்னா. ஆனாலும் ரெய்னா 2017க்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். இந்திய ஒருநாள் அணியில் மிடில் ஆர்டர் சிக்கல் இருந்த நிலையில், 2019 உலக கோப்பைக்கான மிடில் ஆர்டரி பேட்ஸ்மேனை தேடும் முயற்சியில், ரெய்னாவுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக 2018ல் ஆடிய தொடரை ரெய்னா சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. இதையடுத்து அத்துடன் ஓரங்கட்டப்பட்ட ரெய்னா, அதன்பின்னர் இதுவரை இந்திய அணியில் மீண்டும் நுழைய முடியவில்லை. 

இந்நிலையில், அண்மையில் தனது புறக்கணிப்பு குறித்து பேசிய ரெய்னா, சீனியர் வீரர்கள் விவகாரத்தை தேர்வுக்குழு சரியாக கையாளவில்லை. என்னை ஏன் ஓரங்கட்டினார்கள் என்று என்னிடம் சொல்லவேயில்லை. எதுவுமே சொல்லவில்லையென்றால், எப்படி ஒரு வீரர் மேம்படுத்திக்கொள்ள முடியும் என்று கேள்வியெழுப்பியிருந்தார். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்திடம் இதுகுறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எம்.எஸ்.கே.பிரசாத், 1999ல் லட்சுமணன் டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். அதன்பின்னர் ரஞ்சி தொடரில் சிறப்பாக ஆடி 1400 ரன்களுக்கு மேல் குவித்து தேர்வாளர்களின் பார்வையை தன் பக்கம் திருப்பி மீண்டும் அணியில் இடம்பிடித்தார். இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்படும் வீரர்களிடமிருந்து அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். 

ரெய்னாவை அழைத்து தனிப்பட்ட முறையில் அவர் நீக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் மீண்டும் அணியில் நுழைய வேண்டியதற்கான வழிமுறைகள் அனைத்தையுமே நான் சொல்லியிருக்கிறேன். அப்படியிருக்கையில், அவர் நடந்த சம்பவத்திற்கு நேர்மாறாக பேசியிருப்பது வருத்தமளிக்கிறது. 

இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட பிறகு, உத்தர பிரதேச அணியில் ரெய்னா ஆடிய 4 போட்டிகளை கான்பூர் மற்றும் லக்னோவில் நானே பார்த்திருக்கிறேன். மற்ற சில போட்டிகளை மற்ற தேர்வாளர்களும் பார்த்திருக்கிறார்கள். அவர் ரஞ்சியில் சரியாக ஆடவில்லை. அதனால் தான் மீண்டும் இந்திய அணியில் அவரை எடுக்கவில்லை. எனது பதவிக்காலத்தில் 200 ரஞ்சி போட்டிகளை பார்த்திருக்கிறோம். அதற்கான ஆவணங்கள் உள்ளன. இந்திய அணியில் சோபிக்காத வீரர், அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டால், அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடினால் மீண்டும் அணியில் இடம்பெறலாம். ஆனால் ரெய்னா சரியாக ஆடாததால்தான் மீண்டும் இந்திய அணியில் அவரை எடுக்கவில்லை என்று எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.  
 

click me!