சர்ஃபராஸ் அகமது நீக்கத்திற்கு இதுதான் காரணம்.. புது குண்டை தூக்கிப்போடும் முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Oct 20, 2019, 12:11 PM IST
Highlights

பாகிஸ்தான் அணியின் கேப்டன்சி பொறுப்பில் இருந்து மட்டுமல்லாமல் அணியிலிருந்தே சர்ஃபராஸ் அகமது ஓரங்கட்டப்பட்டுள்ள நிலையில், அவரது நீக்கத்திற்கு முன்னாள் வீரர் ஒருவர் புது அர்த்தம் கற்பித்துள்ளார். 
 

சர்ஃபராஸ் அகமதுவின் கேப்டன்சியில் பாகிஸ்தான் அணி, 2017ல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அதுமட்டுமல்லாமல் டி20 தரவரிசையில் முதலிடத்திலும் இருந்தது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் படுமோசமாக ஆடி, தொடர் தோல்விகளை சந்தித்தது. 

உலக கோப்பையில் தோற்றது மட்டுமல்லாமல், சொந்த மண்ணில் நீண்ட இடைவெளிக்கு பின் கிரிக்கெட் ஆடிய பாகிஸ்தான் அணி, அது நம்பர் 1 இடத்தில் இருக்கும் டி20 ஃபார்மட்டில் இலங்கையிடம் ஒயிட்வாஷ் ஆனது, அந்த அணிக்கு மரண அடியாக விழுந்தது. 

சர்ஃபராஸ் அகமது கேப்டனாகவும் சரியாக செயல்பட முடியாமல், பேட்ஸ்மேனாகவும் சோபிக்க முடியாமல், ரெண்டுங்கெட்டானாக திணறினார். கேப்டன்சி நெருக்கடி அவரது பேட்டிங்கையும் பாதித்தது. அதனால் அவர் இரண்டிலுமே சொதப்பினார். அந்த நெருக்கடியை கையாள முடியாமல் நிராயுதபாணியாக நின்றார். 

இந்நிலையில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன்சி பொறுப்பிலிருந்து மட்டுமல்லாமல் அணியிலிருந்தே ஓரங்கட்டப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. 

இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து சர்ஃபராஸ் அகமது நீக்கப்பட்டு, டெஸ்ட் அணிக்கு அசார் அலியும் டி20 அணிக்கு பாபர் அசாமும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கேப்டன்சியில் இருந்து மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய தொடருக்கான, பாகிஸ்தான் அணியிலிருந்தே சர்ஃபராஸ் அகமது நீக்கப்பட்டுள்ளார்.

சர்ஃபராஸ் அகமது அணியிலிருந்தே ஓரங்கட்டப்பட்டிருப்பதால், அவரது கெரியரே முடிந்துவிட்டது என்றும் இனிமேல் அவர் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்பில்லை என்றும் அக்தர் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சர்ஃபராஸ் அகமதுவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொயின் கான். இதுகுறித்து பேசியுள்ள மொயின் கான், பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் தேர்வுக்குழு தலைவராகவும் இருக்கும் மிஸ்பா உல் ஹக் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகிய இருவருக்குமே சர்ஃபராஸ் அகமதுவை சுத்தமாக பிடிக்கவே பிடிக்காது. தொடர்ச்சியாக 11 டி20 தொடர்களை வென்று கொடுத்த கேப்டனான சர்ஃபராஸ் அகமதுவை டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஒருசில மோசமான ஆட்டத்திற்காக அவரை அணியிலிருந்து நீக்குவது சரியல்ல என்று மொயின் கான் தெரிவித்துள்ளார். 

ஆட்டத்தின் அடிப்படையில் இல்லாமல், அதற்கு அப்பாற்பட்டு தனிப்பட்ட முறையில் பிடிக்காது என்பதற்காகவே, சர்ஃபராஸ் அகமது நீக்கப்பட்டிருப்பதாக மொயின் கான் தெரிவித்துள்ளார். 
 

click me!