பாண்டிங் - தோனி.. யாரு பெஸ்ட் கேப்டன்..? 2 பேரோட கேப்டன்சியிலும் ஆடிய வீரரின் அதிரடி பதில்

By karthikeyan VFirst Published Apr 23, 2020, 9:22 PM IST
Highlights

ரிக்கி பாண்டிங் மற்றும் தோனி ஆகிய இருவரில் யார் சிறந்த  கேப்டன் என்ற கேள்விக்கு, இருவரது கேப்டன்சியிலும் ஆடியுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹசி அதிரடியாக தனது பதிலை கூறியுள்ளார். 
 

சர்வதேச கிரிக்கெட்டில் ரிக்கி பாண்டிங் மற்றும் தோனி ஆகிய இருவருமே சிறந்த கேப்டன்கள். பாண்டிங் ஆஸ்திரேலிய அணிக்கும், தோனி இந்திய அணிக்கும் கேப்டனாகவும் வீரராகவும் பல அபார வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளனர். 

ரிக்கி பாண்டிங்கின் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, அந்த காலக்கட்டத்தில் வீழ்த்தவே முடியாத வெற்றிகரமான அணியாக கெத்தாக வலம்வந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு 2003 மற்றும் 2007 ஆகிய இரண்டு முறை தொடர்ச்சியாக உலக கோப்பையை வென்று கொடுத்தவர் பாண்டிங். அவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, அனைத்து அணிகளின் மீது ஆதிக்கம் செலுத்தி வெற்றிகளை குவித்து நம்பர் 1 அணியாக திகழ்ந்தது. 

அதேபோல இந்திய அணியின் கேப்டன் தோனி, கங்குலி உருவாக்கியிருந்த இந்திய அணியை மேலும் வளர்த்தெடுத்து வெற்றிகளை குவித்து கொடுத்தார். ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை, டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என மூன்றுவிதமான சர்வதேச கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனிதான். 

பாண்டிங் மற்றும் தோனி ஆகிய இருவருமே சிறந்த பேட்ஸ்மேன்கள் மட்டுமல்லாது தலைசிறந்த கேப்டன்களும் கூட. அந்தவகையில், அவர்கள் இருவரின் கேப்டன்சியிலும் ஆடியுள்ள மைக் ஹசியிடம் இருவரில் யார் சிறந்த ஒருநாள் அணி கேப்டன் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த மைக் ஹசி, இருவருமே அருமையான கேப்டன்கள். இருவரில் யார் சிறந்தவர் என்று சொல்வது மிகக்கடினம். இருவருமே வித்தியாசமானவர்கள். தோனி மிகவும் அமைதியாகவும் கூலாகவும் இருப்பார்.  அதிகமாக பேசமாட்டார்; ஆனால் அவர் பேசினால் அனைவருக்குமே பயனுள்ள வகையில் இருக்கும். அதனால் எல்லாருமே அவரது பேச்சை உன்னிப்பாக கவனிப்பார்கள். 

பாண்டிங் அப்படியே நேர்மாறானவர். களத்தில் மிகவும் ஆக்ரோஷமானவர். பாண்டிங்கிற்கு போட்டி மனப்பான்மை மிகவும் அதிகம். ஃபீல்டிங் பயிற்சியின்போது அவர் தான் பெஸ்ட்டாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர். அதேபோல வலைப்பயிற்சியில் கூட சிறப்பாக பேட்டிங் ஆட நினைப்பவர். இருவருமே வித்தியாசமான அணுகுமுறையை கொண்டவர்கள். ஆனால் அருமையான கேப்டன்கள். எனவே இருவரில் ஒருவரை தேர்வு செய்வது கடினம் என்றார் ஹசி. 

ஹசி சிஎஸ்கேவில் தோனியின் தலைமையில் ஆடியிருக்கிறார். சிஎஸ்கே அணிக்காக பல முக்கியமான இன்னிங்ஸ்களை ஆடி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்திருக்கிறார்.
 

click me!