#ICCWTC ஃபைனலில் ரோஹித்துடன் யாரை தொடக்க வீரராக இறக்க வேண்டும்..? மைக் ஹெசன் கருத்து

By karthikeyan VFirst Published Jun 9, 2021, 8:12 PM IST
Highlights

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ரோஹித்துடன் யார் தொடக்க வீரராக இறங்க வேண்டும் என்று நியூசிலாந்து முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான மைக் ஹெசன் கருத்து கூறியுள்ளார்.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரும் 18-22ல் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் ஃபைனலில் மோதுகின்றன.

சமபலம் வாய்ந்த இரு அணிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மோதுவதால் அந்த போட்டியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இரு அணிகளுமே மிகச்சிறந்த வீரர்களை கொண்ட மற்றும் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் சமபலத்துடன் திகழும் அணிகள் ஆகும். இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட் என வலுவான பேட்டிங் ஆர்டர் இருக்கிறது என்றால் நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர், டாம் லேதம், கான்வே, ஹென்ரி நிகோல்ஸ் என சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

இந்திய அணியில் பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, அஷ்வின், சிராஜ், ஜடேஜா ஆகியோர் என்றால், நியூசிலாந்து அணியில் டிம் சௌதி, டிரெண்ட் போல்ட், கைல் ஜாமிசன், இஷ் சோதி, ஃபெர்குசன் ஆகியோர் உள்ளனர்.  இப்படியாக இரு அணிகளும் மிகச்சிறந்த வீரர்களை கொண்ட சமபலம் வாய்ந்த சிறந்த அணிகள் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும்.

இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், மயன்க் அகர்வால் ஆகிய  3 தொடக்க வீரர்கள் உள்ள நிலையில், ரோஹித் சர்மா தொடக்க வீரராக இறங்குவது உறுதி. அவருடன் கில் - மயன்க் ஆகிய இருவரில் யார் இறங்குவார் என்பதுதான் கேள்வி. அதற்கு விடை கூறியுள்ளார் நியூசிலாந்து முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான மைக் ஹெசன்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மைக் ஹெசன், இந்திய அணி ரோஹித்துடன் ஷுப்மன் கில்லைத்தான் தொடக்க வீரராக இறக்கும் என நினைக்கிறேன். ஆனால் என்னை கேட்டால், மயன்க் அகர்வாலைத்தான் இறக்க வேண்டும் என்பேன். மயன்க் அகர்வாலுக்கு நியூசிலாந்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்ட அனுபவம் இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக ஆடிய அனுபவம் இருக்கிறது என்பதால் மயன்க் அகர்வாலை ரோஹித்துடன் தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்று மைக் ஹெசன் கூறியுள்ளார்.

மயன்க் அகர்வால் ஆஸி., சுற்றுப்பயணத்தில் காயமடைந்ததன் விளைவாக, அந்த தொடரின் எஞ்சிய போட்டிகளிலும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ஷுப்மன் கில் தான் தொடக்க வீரராக இறங்கினார். ஆனாலும் நியூசிலாந்துக்கு எதிராக ஆடிய அனுபவம் இருக்கிறது என்பதால் நியூசிலாந்தை எதிர்கொள்ள மயன்க் தான் சரியான வீரர் என்று மைக் ஹெசன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

click me!