
ஐபிஎல் 15வது சீசனில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி மும்பை வான்கடேவில் நடந்த போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
லக்னோ அணி ஆவேஷ் கானுக்கு பதிலாக கிருஷ்ணப்பா கௌதமை ஆடும் லெவனில் சேர்த்தது. டெல்லி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆயுஷ் பதோனி, க்ருணல் பாண்டியா, கிருஷ்ணப்பா கௌதம், ஜேசன் ஹோல்டர், துஷ்மந்தா சமீரா, மோசின் கான், ரவி பிஷ்னோய்.
டெல்லி கேபிடள்ஸ் அணி:
பிரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், சேத்தன் சகாரியா.
முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணியின் தொடக்க வீரர் குயிண்டன் டி காக் அதிரடியாக தொடங்கினார். 13 பந்தில் 23 ரன்கள் அடித்து அவர் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு கேஎல் ராகுலும் தீபக் ஹூடாவும் இணைந்து அடித்து ஆடி 95 ரன்களை குவித்தனர். இருவருமே அரைசதம் அடித்த நிலையில், தீபக் ஹூடா 34 பந்தில் 52 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
அரைசதத்திற்கு பின்னரும் சிறப்பாக பேட்டிங் ஆடிய கேஎல் ராகுல் 77 ரன்களுக்கு ஷர்துல் தாகூரின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். 51 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 77 ரன்களை குவித்தார் ராகுல். மார்கஸ் ஸ்டோய்னிஸ் சோபிக்கத் தவறினார். ஸ்டோய்னிஸ் 16 பந்தில் 17 ரன்கள் மட்டுமே அடித்தார். அதனால் லக்னோ அணியால் 200 ரன்களை கடக்க முடியவில்லை. 20 ஓவரில் 195 ரன்கள் அடித்த லக்னோ அணி 196 ரன்களை டெல்லி கேபிடள்ஸுக்கு இலக்காக நிர்ணயித்தது.
196 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் அதிரடி தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா (5) மற்றும் டேவிட் வார்னர் (3) ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். டேவிட் வார்னரை மோசின் கானும், பிரித்வி ஷாவை சமீராவும் வீழ்த்தினர். அதன்பின்னர் மிட்செல் மார்ஷும் கேப்டன் ரிஷப்பும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடினர். மார்ஷ் 20 பந்தில் 37 ரன்களும், ரிஷப் பண்ட் 30 பந்தில்44 ரன்களும் விளாசினர். ஆனால் இருவருமே கிடைத்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை. மிட்செல் மார்ஷை கிருஷ்ணப்பா கௌதமும், ரிஷப் பண்ட்டை மோசின் கானும் வீழ்த்தினர்.
லலித் யாதவ் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். ரோவ்மன் பவல் சில பெரிய ஷாட்டுகளை ஆடி 21 பந்தில் 35 ரன்கள் அடித்தாலும் கூட, அவரை மேலும் நிலைக்கவிடாமல் வீழ்த்தினார் மோசின் கான். வார்னர், ரிஷப் பண்ட், ரோவ்மன் பவல் ஆகிய டெல்லி அணியின் 3 முக்கியமான வீரர்களை வீழ்த்திய மோசின் கான், ஷர்துல் தாகூரையும் வீழ்த்தினார். டெல்லி வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பியதால் 20 ஓவரில் 189 ரன்கள் அடித்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. லக்னோ அணி சார்பில் மோசின் கான் அபாரமாக பந்துவீசி 4 ஓவரில் வெறும் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.