தோனிக்கு கதவை திறந்துவிடும் ரிஷப் பண்ட்.. சாத்த துடிக்கும் சாம்சன்

By karthikeyan VFirst Published Nov 29, 2019, 12:36 PM IST
Highlights

இந்திய அணியில் தோனியின் எதிர்காலம் முடிந்துவிட்டது. ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கு பின்னர் தோனி இந்திய அணியில் எடுக்கப்படவில்லை. 
 

உலக கோப்பையுடன் தோனி ஓய்வு பெறுவார் என ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஓய்வு அறிவிப்பது குறித்து மௌனம் காக்கும் தோனி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் ஆடாமல், ராணுவ பயிற்சிக்கு சென்றார். அதன்பின்னர் தென்னாப்பிரிக்க தொடரிலிருந்து தன்னைத்தானே அணியிலிருந்து விடுவித்துக்கொண்டார். 

தோனி அவரை அணியிலிருந்து விடுவித்துக்கொள்ளா விட்டாலும் அவருக்கு அணியில் இடமில்லை என்பதே உண்மை. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தயாராகிவருகிறது. எனவே இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரிஷப் பண்ட் அடுத்த விக்கெட் கீப்பராக உருவாக்கப்பட்டுவருகிறார். 

ஆனால் ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக மோசமாக ஆடிவருகிறார். விக்கெட் கீப்பிங்கில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் சொதப்புகிறார் ரிஷப் பண்ட். ஒன்றிரண்டு போட்டிகளில் சொதப்பினால் பரவாயில்லை. ஆனால், வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் என தொடர்ச்சியாக மூன்று தொடர்களில் சொதப்பியிருக்கிறார். 

ரிஷப் பண்ட் தன் மீதான அழுத்தத்தை உணர்வதால் அவரால் அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக சொதப்பிவரும் நிலையில்,வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் அணியில் எடுக்கப்பட்டார். ஆனால் அவர் மாற்று விக்கெட் கீப்பராக எடுக்கப்படவில்லை என்றும் பேட்ஸ்மேனாக மட்டுமே எடுக்கப்பட்டிருப்பதாகவும் ரிஷப் பண்ட்டை காப்பாற்றும் வகையில் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் பேசியிருந்தார். 

வங்கதேசத்திற்கு எதிராக சாம்சனுக்கு ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பளிக்காமல், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் புறக்கணிக்கப்பட்டார். ஆனால் தவான் காயத்தால் தொடரிலிருந்து வெளியேறியதால், சஞ்சு சாம்சனுக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இந்நிலையில், ரிஷப் பண்ட் இனிமேலும் சொதப்பினால், சஞ்சு சாம்சனுக்கு விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக இறங்கும் வாய்ப்பு கிடைக்கும். அதை சஞ்சு சாம்சன் பயன்படுத்தியே ஆக வேண்டும். அவரும் பயன்படுத்திக்கொள்ளாத பட்சத்தில் தோனி மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பிருப்பதாக லட்சுமணன் கருதுகிறார். அதேநேரத்தில் சஞ்சு சாம்சன் தனக்கான வாய்ப்பை இறுகப்பிடித்துக்கொள்ளும் பட்சத்தில் தோனிக்கு வாய்ப்பில்லை. 

தோனி மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவாரா அல்லது அவரது கெரியர் முடிந்துவிட்டதா என்பது பெரும் விவாதக்களமாக மாறியுள்ள நிலையில், தோனியின் வாய்ப்பு குறித்து பேசிய விவிஎஸ் லட்சுமணன், ரிஷப் பண்ட்டுக்கு மாற்றாக சஞ்சு சாம்சன் இருக்கிறார் என்று தேர்வுக்குழுவும் அணி நிர்வாகமும் ஒரு வலுவான மெசேஜை கொடுத்திருக்கிறது. ரிஷப் பண்ட்டுக்கு ஏராளமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுவிட்டன. 

எனவே அவரிடம் அணி நிர்வாகத்தினர் பேசுவார்கள். அவரை உடனடியாக தூக்கியெறிய நினைக்கமாட்டார்கள். ஆனாலும் தனது திறமையை நிரூபித்து தனக்கு கிடைத்த வாய்ப்பை தக்கவைத்து கொள்வதும், அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றிக்கொள்வதும் ரிஷப் பண்ட்டின் கையில்தான் உள்ளது. ஆட்டத்தை ஒரு சில ஓவர்களில் மாற்றிவிடக்கூடிய திறன் பெற்றவர் ரிஷப் என்பதிலும் பெரிய ஷாட்டுகளை அசால்ட்டாக ஆடக்கூடியவர் என்பதிலும் சந்தேகமில்லை. 

ரிஷப் பண்ட் மிகக்கடுமையான அழுத்தத்தில் இருக்கிறார் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஏனெனில், அவர் இதற்கு முன்னர் ஸ்பின்னர்களுக்கு எதிராக எப்படி ஆடியிருக்கிறார் என்பதை பார்த்திருக்கிறோம். அவரது மனநிலையும் பேட்டிங் டெக்னிக்கும் ஸ்பின்னர்களை தெறிக்கவிடுவதுதான். ஆனால் இப்போது அவரது பேட்டிங்கில் ஏற்பட்டிருக்கும் தொய்வு, அவர் ஆடும் லெவனில் தனது இடத்தை தக்கவைப்பதற்காக கடுமையான அழுத்தத்தில் இருக்கிறார் என்பதை அப்பட்டமாக காட்டுகிறது. 

தோனி கொஞ்சம் பொறுமையாக இருந்து ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரின் ஆட்டத்தை கவனிக்க வேண்டும். அவர்கள் இருவரும் தங்களுக்கான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளாத பட்சத்தில், தோனி மீண்டும் அணியில் இடம்பிடித்துவிடுவார். தோனி ஐபிஎல்லில் சிறப்பாக ஆடும் குறியில் இருக்கிறார். எனவே ரிஷப்பும் சஞ்சு சாம்சனும் சொதப்பும்பட்சத்தில் தோனிக்கான வாய்ப்பு உறுதி என்று லட்சுமணன் தெரிவித்துள்ளார். 

ஆனால், சஞ்சு சாம்சனுக்கு இன்னும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியில் இடம்பிடிக்கும் முனைப்பில் உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக ஆடிவருவதால், ரிஷப் பண்ட்டை போல இல்லாமல் தனக்கான வாய்ப்பை கண்டிப்பாக பயன்படுத்தி தனது இடத்தை உறுதிசெய்வார் என்று நம்பலாம். 
 

click me!