அறிமுக போட்டியிலயே கோலியை வீழ்த்தியது எப்படி..? சூட்சமத்தை பகிர்ந்த அறிமுக வீரர்

By karthikeyan VFirst Published Feb 21, 2020, 4:57 PM IST
Highlights

அறிமுக போட்டியிலேயே, தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய கைல் ஜாமிசன், கோலிக்கு எதிரான தனது திட்டத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார் ஜாமிசன்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்டத்தில் 55 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் அடித்துள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர்களும் மிகச்சிறந்த வீரர்களுமான கோலி, புஜாரா ஆகியோரே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

பிரித்வி ஷா 16 ரன்களும் மயன்க் அகர்வால் 34 ரன்களும் அடித்தனர். இந்த போட்டியில் அறிமுகமான நியூசிலாந்தின் உயரமான வீரரான கைல் ஜாமிசன், கோலி, புஜாரா, ஹனுமா விஹாரி ஆகிய மூவரையும் முறையே 2, 11, 7 ரன்களுக்கு வீழ்த்தினார். மூன்று முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் கைல் ஜாமிசன்.

ரஹானே மட்டும்தான் களத்தில் நங்கூரமிட்டு சிறப்பாக ஆடினார். அவர் 38 ரன்களுடன் களத்தில் உள்ளார். இரண்டாவது செசன் ஆடிக்கொண்டிருக்கும்போது மழை குறுக்கிட்டதால், 55 ஓவரிலேயே முதல் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. 

விராட் கோலி தொடர்ந்து சரியாக ஆடாதது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு. சர்வதேச கிரிக்கெட்டில் ரன்களை குவித்ததால் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, கடந்த 19 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கோலியின் அவுட் ஆஃப் ஃபார்ம் ரசிகர்களுக்கு வேதனையளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அணிக்கும் பெரிய பாதிப்பு. அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே மிகப்பெரிய ஜாம்பவனான கோலியின் விக்கெட்டை வீழ்த்திய ஜாமிசன், கோலிக்கு எதிரான தனது திட்டம் குறித்து பேசியுள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள கைல் ஜாமிசன், விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் முக்கியமான வீரரே கோலி தான். அவரை விரைவில் வீழ்த்தியது எங்களுக்கு பெரிய பலம். அவரையும் புஜாராவையும் விரைவில் வீழ்த்தியது நல்ல விஷயம். கோலி உலகம் முழுதும் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்துவருகிறார். ஆடுகளத்தின் தன்மையை பயன்படுத்தி அவரை விரைவில் வீழ்த்த திட்டமிட்டோம். 

ஸ்டம்ப் லைனில் பந்துவீசினால் கோலி சிறப்பாக ஆடிவிடுவார். என்னுடைய உயரத்திற்கு எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஈசியா கிடைக்கும். எனவே எக்ஸ்ட்ரா பவுன்ஸ் வீசி பேட்ஸ்மேனை ஆடவைத்து விக்கெட் வீழ்த்துவதுதான் எனக்கு ரோல். ஸ்டம்ப் லைனில் கோலி ஸ்ட்ராங் என்பதால், சற்று ஆஃப் திசையில் விலக்கி வீசினேன். நான் எதிர்பார்த்த லைனில் பந்து கரெக்ட்டாக செல்லவில்லை. லைன் கொஞ்சம் மிஸ்ஸானாலும் நல்ல வேளையாக அது எட்ஜ் ஆகிவிட்டது. சரியான ஏரியாவில்  வீசுவதே எனது திட்டம். அதை ரிலாக்ஸாக செய்தேன் என்று ஜாமிசன் தெரிவித்தார். 

click me!