நான் தாதாவின் மிகப்பெரிய ரசிகன்..! ஐசிசி தலைவர் பதவிக்கு தாதா தான் சரியான ஆளு.. சங்கக்கரா ஆதரவு

By karthikeyan VFirst Published Jul 26, 2020, 7:34 PM IST
Highlights

ஐசிசி தலைவர் பதவிக்கு கங்குலி தான் மிகப்பொருத்தமான நபர் என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கரா தெரிவித்திருக்கிறார்.
 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தலைமைத்துவ பண்புகளை பெற்ற சிறந்த தலைவர் என்பதும் சிறந்த நிர்வாகி என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்திய அணி சூதாட்டப்புகாரில் சிக்கி சின்னாபின்னமாகியிருந்த இக்கட்டான சூழலில், இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று, இந்திய அணியை உலகின் சிறந்த அணியாக உருவாக்கி தலைநிமிர வைத்தவர்.

கங்குலியின் நிர்வாகத்திறமை பல நேரங்களில் இந்திய கிரிக்கெட்டிற்கு உதவியிருக்கிறது. தற்போது பிசிசிஐ-யின் தலைவராக இருந்துவரும் கங்குலி, இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் பணிகளில் ஈடுபட்டுவருகிறார். 

இந்நிலையில், ஐசிசி தலைவர் பதவிக்கு கங்குலியின் பெயர் அடிபடுகிறது. ஐசிசி தலைவராக இருந்த ஷேஷான்க் மனோகர் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, அடுத்த ஐசிசி தலைவராக கங்குலி நியமிக்கப்பட வேண்டும் என்று தென்னாப்பிரிக்கா முன்னாள் கேப்டனும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய இயக்குநருமான கிரேம் ஸ்மித் உட்பட பல முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவருமான குமார் சங்கக்கராவும் கங்குலிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். கங்குலி தான் ஐசிசி தலைவர் பதவிக்கு மிகப்பொருத்தமான நபர் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள குமார் சங்கக்கரா, நான் தாதாவின் மிகப்பெரிய ரசிகன். சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதற்காக மட்டுமல்ல; கிரிக்கெட் குறித்த அவரது புத்திக்கூர்மை  அபரிமிதமானது. ஐசிசி தலைவராக பொறுப்பேற்பவர், தங்கள் நாடு குறித்த குறுகிய மனப்பான்மை இல்லாத சர்வதேசத்துக்கானவராக இருக்க வேண்டும்.

உலகளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் பார்வையாளர்களும் சிறுவர் - சிறுமிகளுமே கிரிக்கெட்டின் அடித்தளம். அதை நன்கு அறிந்த கங்குலி, ஐசிசி தலைவராக சிறப்பாக செயல்பட்டு கிரிக்கெட்டை மேம்படுத்துவார். கங்குலி பிசிசிஐ தலைவராவதற்கு முன்பாகவே அவரது அணுகுமுறையையும் நேர்த்தியான பணிகளையும் நான் பார்த்திருக்கிறேன். சர்வதேச வீரர்களுடனான உறவை அவர் வளர்த்துக்கொண்ட விதத்தையும் பழகிய விதத்தையும் நான் பார்த்திருக்கிறேன். ஐசிசி தலைவர் பதவிக்கு கங்குலி தான் மிக மிகப்பொருத்தமான நபர் என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை என்று சங்கக்கரா தெரிவித்துள்ளார்.
 

click me!