ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்

By karthikeyan VFirst Published Jan 18, 2020, 11:48 AM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ், ஹர்பஜன் சிங்கின் சாதனையை முறியடித்துள்ளார். 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, ராஜ்கோட்டில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி 340 ரன்களை குவித்த இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை 304 ரன்களுக்கு சுருட்டி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தாத இந்திய பவுலர்கள், இந்த போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். 

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஷமி 3 விக்கெட்டுகளையும், குல்தீப், சைனி, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பும்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். குல்தீப் யாதவ், அலெக்ஸ் கேரி மற்றும் ஸ்மித் ஆகிய இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினர். 98 ரன்களில் ஸ்மித்தை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது குல்தீப் தான்.

அலெக்ஸ் கேரியின் விக்கெட் குல்தீப்பிற்கு ஒருநாள் கிரிக்கெட்டில் 100வது விக்கெட். தனது 100வது விக்கெட்டை 58வது போட்டியில் வீழ்த்தியதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய ஸ்பின்னர் என்ற சாதனையை குல்தீப் யாதவ் படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஹர்பஜன் சிங் 76 போட்டிகளில் 100 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். அதை முறியடித்துள்ளார் குல்தீப். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்கள் பட்டியலில் ஷமி(56 போட்டிகள்), பும்ரா(57போட்டிகள்) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் குல்தீப் உள்ளார்.
 

click me!