இந்திய ரசிகர்களின் சார்பில் ஸ்மித்திடம் மன்னிப்பு கேட்ட கோலி!! நம்ம ஆளுங்க தப்பான முன்னுதாரணம் ஆயிடக்கூடாது - விராட்.. வீடியோ

By karthikeyan VFirst Published Jun 10, 2019, 10:41 AM IST
Highlights

உலக கோப்பை தொடங்கியது முதலே ஆஸ்திரேலிய அணி ஆடும் போட்டிகளில் ஸ்மித் மற்றும் வார்னரை நோகடிக்கும்படி ரசிகர்கள் கிண்டல் செய்துவருகின்றனர்.

உலக கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 352 ரன்களை குவித்தது. 353 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியை 316 ரன்களுக்கு சுருட்டி 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செயல் அனைவரையும் கவர்ந்திழுத்தது. விராட் கோலியை சண்டைக்கோழி என்று மட்டுமே நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு அவரது உண்மையான கேரக்டரை வெளிப்படுத்தும் சம்பவமாக அமைந்தது. 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடையில் இருந்த வார்னரும் ஸ்மித்தும் தடை முடிந்ததால், உலக கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்காக ஆடிவருகின்றனர். தடையிலிருந்து திரும்பி வந்தாலும், அவர்களை இங்கிலாந்து ரசிகர்கள் விடுவதாகயில்லை. பால் டேம்பரிங் விஷயத்தை சுட்டிக்காட்டி தொடர்ந்து அவர்களை ரசிகர்கள் கிண்டலடித்துவருகின்றனர். பவுண்டரி லைனில் அவர்கள் இருவரும் ஃபீல்டிங் செய்யும்போது ரசிகர்கள் கிண்டலடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

உலக கோப்பை தொடங்குவதற்கு முன்னதாகவே, ஸ்மித் மற்றும் வார்னரை நோகடிக்கும்படி ரசிகர்கள் கிண்டல் செய்ய வேண்டாம் என்று இங்கிலாந்து வீரர் மொயின் அலி கோரிக்கை விடுத்திருந்தார். ஆனாலும் ரசிகர்கள் அவர்களை சீண்டிய வண்ணமே இருந்தனர். 

இந்நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான நேற்றைய போட்டியில், இந்திய அணியின் பேட்டிங்கின்போது பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ஸ்மித்தை இந்திய ரசிகர்கள் கிண்டலடித்தனர். உடனடியாக அந்த ரசிகர்கள் இருந்த ஸ்டேண்டை நோக்கி, கிண்டல் செய்யாமல் ஸ்மித்தை கை தட்டி உற்சாகப்படுத்துங்கள் என்று கோலி சற்று கோபமாக ரசிகர்களை நோக்கி செய்கை செய்தார். கேப்டன் கோலியின் கோரிக்கைக்கு ரசிகர்கள் செவி மடுத்தனர் என்பதுதான் நல்ல செய்தி. கோலியின் செயலை கண்டு நெகிழ்ந்துபோன ஸ்மித், கோலியுடன் கைகுலுக்கி தனது நன்றியை மறைமுகமாக வெளிப்படுத்திவிட்டு சென்றார்.

கோலியின் இந்த செயல், உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தது. கோலியை சண்டைக்கோழியாக மட்டுமே பார்க்கும், அவரை பிடிக்காத கிரிக்கெட் ரசிகர்களுக்குக்கூட கோலியின் மீது நன்மதிப்பை பெற்று கொடுத்தது. 

போட்டிக்கு பின்னர் இந்த சம்பவம் குறித்து பேசிய விராட் கோலி, இந்திய ரசிகர்கள் ஏராளமானோர் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் தவறான முன்னுதாரணமாக இருக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். கிண்டலடித்து அவரை நோகடிக்கும் அளவுக்கு அவர் எந்த தவறும் செய்யவில்லை. ஒரு தவறு செய்து அதற்காக வருந்தி, தடையும் அனுபவித்துவிட்டு, மீண்டும் கிரிக்கெட் ஆட வந்தவரை இப்படியெல்லாம் செய்யக்கூடாது. இந்திய ரசிகர்களின் சார்பில் அவரிடம் நான் மன்னிப்பு கேட்டேன் என்று கோலி தெரிவித்தார். 

“If I was in a position where something had happened with me, and I’d apologised and accepted it, and came back and still I would get booed, I wouldn’t like it either.” on why he asked the fans to stop booing Steve Smith. | pic.twitter.com/CIMicjoSA0

— Cricket World Cup (@cricketworldcup)
click me!