சச்சின் - கங்குலி சாதனையை முறியடித்த கோலி - ரஹானே

By karthikeyan VFirst Published Aug 25, 2019, 2:36 PM IST
Highlights

இந்திய அணி 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், சீனியர் வீரர்களான கோலியும் ரஹானேவும் ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நல்ல ஃபார்மில் இருக்கும் அனுபவ வீரர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து தெளிவாக ஆடியதால், இந்த ஜோடியை வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. இருவருமே அரைசதம் கடந்து களத்தில் உள்ளனர். 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் கடந்த 22ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிவரும் கோலி-ரஹானே ஜோடி, சச்சின் - கங்குலி ஜோடியின் சாதனையை முறியடித்துள்ளது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் மயன்க் அகர்வால், புஜாரா, கோலி ஆகிய மூவரும் 25 ரன்களுக்கு உள்ளாகவே ஆட்டமிழந்துவிட்டனர். அதன்பின்னர் ரஹானேவும் ராகுலும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். 

ராகுல் 44 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த ரஹானே, 81 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். அதன்பிறகு ஜடேஜா மட்டுமே சிறப்பாக ஆடி 58 ரன்களை அடித்தார். ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் ஆகியோர் பெரிதாக ஆடவில்லை. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. ரோஸ்டன் சேஸ் தான் அதிகபட்சமாக 48 ரன்கள் அடித்தார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் அடித்திருந்தது. இஷாந்த் சர்மா அபாரமாக வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

75 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் இந்த இன்னிங்ஸிலும் ஏமாற்றமளித்தார். மயன்க் 16 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ராகுலும் புஜாராவும் ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றனர். ஆனால் ராகுலை 38 ரன்களில் வீழ்த்திவிட்டார் சேஸ். புஜாராவும் 25 ரன்களில் கீமார் ரோச்சின் பந்தில் ஆட்டமிழக்க, இந்திய அணி 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. 

இதையடுத்து சீனியர் வீரர்களான கோலியும் ரஹானேவும் ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நல்ல ஃபார்மில் இருக்கும் அனுபவ வீரர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து தெளிவாக ஆடியதால், இந்த ஜோடியை வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. இருவருமே அரைசதம் கடந்து களத்தில் உள்ளனர். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் அடித்துள்ளது. கோலி 51 ரன்களுடனும் ரஹானே 53 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியும் ரஹானேவும் சேர்ந்து 100 ரன்களுக்கு மேல் சேர்ப்பது இது 8வது முறையாகும். இதன்மூலம் 4வது விக்கெட்டுக்கு அதிக முறை 100 ரன்கள் சேர்த்த சச்சின் - கங்குலியின் சாதனையை இவர்கள் முறியடித்துள்ளனர். சச்சின் - கங்குலி ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 7 முறை 100 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளனர். அந்த சாதனையை 39 இன்னிங்ஸ்களில் முறியடித்துவிட்டது கோலி - ரஹானே ஜோடி. 
 

click me!