India vs New Zealand கடைசி நேரத்தில் டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய KL Rahul.. மாற்று வீரர் Suryakumar Yadav

By karthikeyan VFirst Published Nov 23, 2021, 4:50 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து கேஎல் ராகுல் விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
 

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து டி20 தொடரை வென்றது.

இதையடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. முதல் டெஸ்ட் வரும் 25ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை கான்பூரில் நடக்கிறது. 2வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 3ம் தேதி முதல் மும்பை வான்கடேவில் நடக்கிறது.

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி கடந்த 12ம் தேதி அறிவிக்கப்பட்டது. முதல் டெஸ்ட்டில் கேப்டன் கோலி ஆடாததால், முதல் டெஸ்ட்டில் ரஹானே தலைமையில் இந்திய அணி ஆடுகிறது. 2வது டெஸ்ட்டிற்கு கேப்டன் கோலி வந்துவிடுவார்.

நாளை மறுநாள்(25ம் தேதி) முதல் டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில், அதற்காக இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான டெஸ்ட் தொடர் என்பதால் வெற்றி வேட்கையில் இந்திய அணி தயாராகிவருகிறது.

இந்நிலையில், தசைப்பிறழ்ச்சி காரணமாக ராகுல் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் ரோஹித் ஆடாததால், ராகுல் - மயன்க் அகர்வால் தொடக்க வீரர்களாக இறங்குவதாக இருந்தது. இந்நிலையில், ராகுல் காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.

எனவே மயன்க் அகர்வாலுடன் ஷுப்மன் கில் தொடக்க வீரராக இறங்குவார். கோலி முதல் டெஸ்ட்டில் ஆடாததால், கில் 4ம் வரிசையில் ஆடியிருப்பார். ராகுலும் மயன்க்கும் தொடக்க வீரர்களாக ஆடியிருப்பார்கள். ஆனால் இப்போது ராகுல் விலகியதால் கில் தொடக்க வீரராக இறங்கியாக வேண்டும். எனவே ராகுலுக்கு மாற்று வீரராக சூர்யகுமார் யாதவ் இந்திய டெஸ்ட் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:

அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), புஜாரா, மயன்க் அகர்வால், ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

விராட் கோலி 2வது டெஸ்ட்டில் ஆடுகிறார்.
 

click me!