கேகேஆரின் வெற்றிக்கு காரணமான ரன் அவுட் – ஐபில் ஃபைனல் மாதிரி த்ரில்லை எகிற வைத்த விக்கெட்!

By Rsiva kumar  |  First Published Apr 21, 2024, 9:13 PM IST

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு காரணமே பிலிப் சால்ட் செய்த அந்த ஒரு ரன் அவுட் தான். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 36ஆவது ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய கேகேஆர் அணியில் பிலிப் சால்ட் நல்ல தொடக்கம் கொடுத்தார். சுனில் நரைன் தடுமாறினாலும், மிடில் ஆர்டரில் வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாட்டம் ஆர்டர்னில் ஆண்ட்ரே ரஸல் மற்றும் ரமன்தீப் சிங் ஓரளவு ரன்கள் எடுத்து கொடுக்க கேகேஆர் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் குவித்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் பவுலிங்கைப் பொறுத்து யாஷ் தயாள் மற்றும் கேமரூன் க்ரீன் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். முகமது சிராஜ் மற்றும் லாக்கி பெர்குசன் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர், 223 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்ட ஆர்சிபி அணியில் விராட் கோலி மற்றும் ஃபாப் டூப்ளெசிஸ் இருவரும் களமிறங்கினர்.

Tap to resize

Latest Videos

கோலி நல்ல தொடக்கம் கொடுத்த போதிலும் அவர் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். 18 ரன்கள் எடுத்திருந்த போது ஹர்ஷித் ராணா வீசிய புல்டாஸ் பந்தில் ஆட்டமிழந்து நோபால் கேட்டார். ஆனால், ரெவியூவில் பந்து ஸ்டெம்பிற்கு மேல் சென்ற நிலையில் அவுட் உறுதி செய்யப்பட்டது. இவரைத் தொடர்ந்து ஃபாப் டூப்ளெசிஸ் 7 ரன்னில் வெளியேறினார்.

அதன் பிறகு வில் ஜாக்ஸ் மற்றும் ரஜத் படிதார் இருவரும் அதிரடியாக விளையாடினர். இதில், இருவருமே மாறி மாறி அரைசதம் அடித்தனர். வில் ஜாக்ஸ் 32 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 55 ரன்னில் ஆட்டமிழக்க, ரஜத் படிதாரும் 23 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 52 ரன்னில் நடையை கட்டினார்.

கேமரூன் க்ரீன் 6, மஹிபால் லோம்ரார் 4 ரன்னிலும், சுயாஷ் பிரபுதேசாய் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நம்பிக்கை நட்சத்திரமான தினேஷ் கார்த்திக் தன் பங்கிற்கு 18 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 25 ரன்கள் எடுத்தார். எனினும் கடைசி ஓவரில் ஆர்சிபி வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கரண் சர்மா களத்தில் இருந்தார். கடைசி ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசினார். முதல் பந்தில் சிக்ஸர் சென்றது. 3ஆவது மற்றும் 4ஆவது பந்திலேயும் கரண் சர்மா சிக்ஸர் அடித்தார்.

இதன் மூலமாக ஆர்சிபி வெற்றியை நெருங்கியது, கடைசி 2 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், 4ஆவது பந்தில் கரண் சர்மா ஆட்டமிழந்தார். கடைசியாக லாக்கி பெர்குசன் களமிறங்கினார். 2 ரன் எடுத்தால் சூப்பர் ஓவர், ஒரு ரன் எடுத்தால் கேகேஆர் வெற்றி, 3 ரன் எடுத்தால் ஆர்சிபி வெற்றி என்ற நிலை இருந்தது.

ஆனால், அவர், ஆஃப் சைடு திசையில் அடித்து விட்டு 2 ரன்கள் எடுக்க ஓடினார். ஆனால், ரமன்தீப் சிங் பந்தை பிடித்து விக்கெட் கீப்பரிடம் த்ரோ செய்யவே, அவரும் பந்தை பிடித்து ஸ்பைடர் மேன் மாதிரி டைவ் அடித்து ஸ்டெம்பில் ஸ்டெமிங் செய்வது போன்று ரன் அவுட் செய்தார். இதன் மூலமாக ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. இறுதியாக ஆர்சிபி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்து ஒரு ரன்னில் தோல்வியை தழுவியது.

இதன் மூலமாக கேகேஆர் த்ரில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5 வெற்றிகளுடன் 2ஆவது இடத்திற்கு முன்னேறியது. 2ஆவது இடத்திலிருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3ஆவது இடத்திற்கு சென்றது. ஆர்சிபி விளையாடிய 8 போட்டிகளில் 7 தோல்விகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. மேலும், பிளே ஆஃப் வாய்ப்பும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. எஞ்சிய 6 போட்டிகளில் ஜெயித்தால் கூட 14 புள்ளிகள் பெறும். ஆனாலும், மற்ற அணிகளின் புள்ளிகள் மற்றும் நெட் ரன் ரேட் அடிப்படையில் ஆர்சிபி பிளே ஆஃப் வாய்ப்பு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!