கோலிக்கு பக்கத்துல கூட ஸ்மித் வரமுடியாது.. தரமான பேட்ஸ்மேனின் ஓபன் ஸ்டேட்மெண்ட்

By karthikeyan VFirst Published May 16, 2020, 4:34 PM IST
Highlights

விராட் கோலியின் பக்கத்தில் கூட ஸ்மித்தால் வரமுடியாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் சிறந்த பேட்ஸ்மேன் ஒருவர் தடாலடியாக தெரிவித்துள்ளார்.
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக விராட் கோலியும் ஸ்டீவ் ஸ்மித்தும் திகழும் நிலையில், அவர்களில் யார் பெஸ்ட் என்ற ஒப்பீடு தொடர்ந்து நடந்துகொண்டேயிருக்கிறது. சமகாலத்தின் இரண்டு சிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்வதால் இந்த ஒப்பீடு தவிர்க்கமுடியாதது.

ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித் சாதனைகளை குவித்துவருகிறார். 

விராட் கோலி மரபார்ந்த பேட்டிங் ஸ்டைலில் ஆடுகிறார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது பேட்டிங் திறனையும் அனைத்து ஷாட்டுகளையும் ஆடும் திறமையையும் வளர்த்துக்கொண்டு சிறந்து விளங்குகிறார். ஆனால் ஸ்மித்தின் பேட்டிங் ஸ்டைல் முற்றிலும் வேறானது. அவர் மரபார்ந்த பேட்டிங் ஸ்டைலை கொண்டவர் அல்ல. முற்றிலும் வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலை கொண்டவர். 

இருவரும் முற்றிலும் வெவ்வேறான பேட்டிங் ஸ்டைலை கொண்டவர்களாக இருந்தாலும், சமகால கிரிக்கெட்டில் இருவருமே மிகத்திறமையான பேட்ஸ்மேன்கள். ஆனாலும் இருவரில் யார் பெஸ்ட் என்பது பல முன்னாள் ஜாம்பவான்களிடம் கேட்கப்படும் கேள்வி. 

அதே கேள்விதான் இங்கிலாந்து முன்னாள் கேப்டனும் சிறந்த பேட்ஸ்மேனுமான கெவின் பீட்டர்சனிடமும் கேட்கப்பட்டது. ஜிம்பாப்வே முன்னாள் வீரரான பொம்மி மபாங்வாவுடன் பீட்டர்சன் இன்ஸ்டாகிராம் லைவில் பேசினார்.

அப்போது, விராட் கோலி-ஸ்டீவ் ஸ்மித் இருவரில் யார் பெஸ்ட் பேட்ஸ்மேன் என்று பீட்டர்சனிடம் பொம்மி கேட்டார். அதற்கு பதிலளித்த பீட்டர்சன், கோலி தான் பெஸ்ட். கோலி சாதனைகளை விரட்டுகிறார், இந்தியாவுக்காக வெற்றிகளை குவித்து கொடுக்கிறார். நெருக்கடியான சூழல்களை திறமையாக எதிர்கொண்டு அணிக்காக தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று கொடுத்துவருகிறார். ஸ்மித்தால் கோலியின் பக்கத்தில் கூட வரமுடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். 

விராட் கோலி 86 டெஸ்ட்  போட்டிகளில் ஆடி 27 சதங்கள், 22 அரைசதங்கள் மற்றும் 58.63 சராசரியுடன் 7,240 ரன்களை குவித்துள்ளார். 248 ஒருநாள் போட்டிகளில் ஆடி 43 சதங்கள் மற்றும் 59.34 என்ற சராசரியுடன் 11,867 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டைவிட ஒருநாள் கிரிக்கெட்டில் கோலியின் சராசரி அதிகம்.

ஸ்மித், 73 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 26 சதங்களுடன் 7,227 ரன்களை குவித்துள்ளார். கோலியை விட 13 டெஸ்ட் போட்டிகள் ஸ்மித் குறைவாக ஆடியுள்ளபோதிலும், கோலியை விட வெறும் 13 ரன்கள் மட்டுமே குறைவாக அடித்துள்ளார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியை விட ஸ்மித் சிறந்து விளங்குகிறார் என்பதையே காட்டுகிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் கண்டிப்பாக கோலிக்கு அருகில் கூட ஸ்மித் போகமுடியாது. இதுவரை 125 ஒருநாள் போடிகளில் ஆடியுள்ள ஸ்மித், 9 சதங்களை மட்டுமே அடித்துள்ளார். கோலி 43 சதங்களுடன் வேற லெவலில் இருக்கிறார்.

click me!