கோலிக்கு கூஜா தூக்காத செம தில்லு.. ஸ்மித் தான் பெஸ்ட் பேட்ஸ்மேன்.. இந்திய வீரர் அதிரடி

By karthikeyan VFirst Published Aug 11, 2020, 4:49 PM IST
Highlights

ஸ்டீவ் ஸ்மித் தான் சமகாலத்தின் பெஸ்ட் டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று இந்திய வீரர் கருண் நாயர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
 

விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகிய நால்வரும் சமகாலகத்தின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்கின்றனர். இந்த பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் அடுத்ததாக இணைகிறார். இவர்களில் விராட் கோலியும் ஸ்டீவ் ஸ்மித்தும் தான் டாப்பில் இருக்கின்றனர்.

விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரும் தலைசிறந்து விளங்கும் நிலையில், இருவரில் யார் பெஸ்ட் என்ற ஒப்பீடு தொடர்ந்து நடந்துகொண்டேயிருக்கிறது. சமகாலத்தின் இரண்டு சிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்வதால் இந்த ஒப்பீடு தவிர்க்கமுடியாதது.

ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித் சாதனைகளை படைத்துவருகிறார். விராட் கோலி மரபார்ந்த பேட்டிங் ஸ்டைலில் ஆடுகிறார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது பேட்டிங் திறனை வளர்த்துக்கொண்டு தலைசிறந்த பேட்ஸ்மேன் என்று அனைவராலும் பாராட்டப்படும் அளவிற்கு உயர்ந்துள்ளார். ஸ்மித் மரபாந்த பேட்டிங் ஸ்டைலில் ஆடமாட்டார்; முற்றிலும் வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலை கொண்டவர்.

ஆனாலும் இருவருமே, ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல. பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களின் நேர்காணலில் முன்வைக்கப்படும் பொதுவான கேள்வி, கோலி - ஸ்மித் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்பதுதான். இந்த போட்டியில், ஸ்மித்தை விட எப்போதுமே கோலி தான் முன்னிலை பெறுகிறார்.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் கோலியை ஸ்மித் முந்துகிறார். ஸ்மித் 73 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 26 சதங்களுடன் 7227 ரன்களை குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 62.84 ஆகும். விராட் கோலி 86 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 27 சதங்களுடன் 7240 ரன்கள் அடித்துள்ளார். ஸ்மித்தை விட 13 டெஸ்ட் போட்டிகள் அதிகமாக ஆடியுள்ள கோலி, அவரைவிட வெறும் 13 ரன்கள் மட்டுமே கூடுதலாக அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் பேட்டிங் சராசரி 53.63 தான். அவரைவிட சுமார் 9 ரன்கள் அதிக சராசரியை வைத்துள்ளார் ஸ்மித்.

கோலி 2018ல் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் சரியாக ஆடவில்லை. அதுமாதிரி சில சமயங்களில், ஒட்டுமொத்த தொடரிலும் கோலி சொதப்பியிருக்கிறார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகம் முழுதும் எந்த நாட்டில் ஆடினாலும், ஸ்மித் அருமையாக பேட்டிங் ஆடி அசத்துகிறார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் தொடரில், வெறும் 7 இன்னிங்ஸ்களில் 110 என்ற சராசரியுடன் மொத்தம் 774 ரன்களை குவித்தார் ஸ்மித். 

இப்படியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித் தான் ஆதிக்கம் செலுத்துகிறார். சமகாலத்தின் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் தான் என்று ஏற்கனவே இந்தியாவின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்திருந்த நிலையில், இந்திய அணியில் தனக்கான இடத்தை எதிர்நோக்கியிருக்கும் கருண் நாயரும் அதே கருத்தைத்தான் தெரிவித்தார். 

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சிறந்த டெஸ்ட் வீரர் யார் என்ற கேள்விக்கு ஸ்டீவ் ஸ்மித் என்று பதிலளித்தார். மேலும் கோலி, ஸ்மித், வில்லியம்சன், ரூட் ஆகிய சமகாலத்தின் சிறந்த 4 பேட்ஸ்மேன்களுக்கு அடுத்து பாபர் அசாம் என்றார்.

இந்திய அணியில் தனக்கான வாய்ப்பை எதிர்நோக்கியிருந்தாலும், அதற்காக கேப்டன் கோலி தான் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று கூஜா தூக்கும் வகையில் பேசாமல், தனது கருத்தை துணிச்சலாக, வெளிப்படையாக தெரிவித்துள்ளார் கருண் நாயர். டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக்குக்கு அடுத்து, முச்சதம் அடித்த ஒரே வீரர் கருண் நாயர் தான். ஆனாலும் அவருக்கு கடந்த  3 ஆண்டுகளாக இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!