யாரையும் குற்றம் சொல்ல முடியாது.. ரிஷப் பண்ட் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க கபில் தேவின் அறிவுரை

By karthikeyan VFirst Published Jan 27, 2020, 10:48 AM IST
Highlights

ரிஷப் பண்ட் திறமையானவர்; எனவே அவரது திறமையை அவர் தான் நிரூபிக்க வேண்டுமே தவிர, அவர் வேறு யாரையும் குறைகூற முடியாது என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார். 
 

தோனிக்கு பிறகு ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் என்பதை உறுதி செய்துவிட்டு, அவருக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கியது அணி நிர்வாகம். ஆனால் தொடர்ச்சியாக பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என இரண்டிலுமே சொதப்பிவந்தார் ரிஷப் பண்ட். எனவே சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற குரல் எழுந்தது. 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் காயமடைந்ததால், இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் கீப்பிங் செய்ய முடியாமல் போனதையடுத்து, கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் அபாரமாக விக்கெட் கீப்பிங் செய்தார். அந்த தொடரின் இரண்டாது ஒருநாள் போட்டியிலும் ரிஷப் பண்ட் ஆடமுடியாததால் ராகுலே கீப்பிங் செய்தார். அந்த போட்டியில் அருமையான ஒரு ஸ்டம்பிங்கும் செய்தார். இதையடுத்து மூன்றாவது போட்டியில் ரிஷப் பண்ட் உடற்தகுதியை பெற்றிருந்தும் கூட உட்காரவைக்கப்பட்டார். 

அதன்பின்னர் தற்போது நடந்துவரும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் கேஎல் ராகுல் தான் விக்கெட் கீப்பிங் செய்துவருகிறார். ராகுல் கீப்பிங் செய்வதால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை அணியில் சேர்க்க வாய்ப்பு கிடைத்ததால், அணிக்கு நல்ல பேலன்ஸ் கிடைத்தது. எனவே அதை கெடுக்க வேண்டாம் என்பதற்காக, ராகுலே தொடர்ந்து விக்கெட் கீப்பராக செயல்பட்டுவருகிறார். ராகுல் தனது இடத்தை வலுவாக பிடித்துவிட்ட அதேவேளையில், ரிஷப் பண்ட் தனது இடத்தை இழந்துவிட்டார். 

Also Read - வீரர்கள் விவகாரத்தில் கேப்டன் கோலிக்கு தாதா போட்ட உத்தரவு.. நியூசிலாந்து தொடரில் இந்திய அணிக்கு கங்குலி கொடுத்த டாஸ்க்

இந்நிலையில், இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கபில் தேவிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அப்போது ரிஷப் பண்ட் குறித்து பேசிய கபில் தேவ், ரிஷப் பண்ட் மிகத்திறமையானவர். அவரது விவகாரத்தில் அவர் யாரையும் குறைகூற முடியாது. அவரது கெரியரை அவர் தான் வடிவமைத்துக்கொள்ள வேண்டும். சிறப்பாக பேட்டிங் ஆடி, தொடர்ச்சியாக ரன்களை குவித்துக்கொண்டே இருக்க வேண்டும். தனது அபாரமான பேட்டிங்கின் மூலம் ரன்களை குவித்து, தன்னை விமர்சித்தவர்கள் தவறு என்பதை அவர் நிரூபிக்க வேண்டும். வீரர்கள் தங்களது திறமையை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும். தேர்வாளர்கள், தங்களை ஒதுக்குவதற்கோ, ஓரங்கட்டுவதற்கோ, பென்ச்சில் உட்கார வைப்பதற்கோ வாய்ப்பே வழங்கக்கூடாது. அதற்கு, நன்றாக ஆடுவது மட்டுமே ஒரே வழி என்று கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார். 
 

click me!