மோசமான முடிவுதான்.. அதுக்காக என்ன பண்றது..? உலக கோப்பை தோல்வி குறித்து வில்லியம்சன் வேதனை

By karthikeyan VFirst Published Nov 20, 2019, 1:29 PM IST
Highlights

உலக கோப்பை முடிவு தீர்மானிக்கப்பட்ட விதம் குறித்து வேதனை தெரிவித்துள்ளார் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன். 
 

இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என இங்கிலாந்து அணி வென்றது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை தொடங்கும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய வில்லியம்சன், உலக கோப்பை இறுதி போட்டியில் முடிவு தீர்மானிக்கப்பட்ட விதம் குறித்து வேதனை தெரிவித்தார். 

2019 உலக கோப்பை இறுதி போட்டியை போன்ற பரபரப்பான மற்றும் மனதை கசக்கி பிழிந்த ஒரு போட்டியை இனிமேல் பார்க்கமுடியுமா என்பதே சந்தேகம்தான். இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அந்த இறுதி போட்டியை பார்த்தவர்களுக்கு செம த்ரில்லர் மூவி பார்த்ததைவிட மிகச்சிறந்த அனுபவம் கிடைத்திருக்கும். அந்தளவிற்கு ரசிகர்களை சீட் நுனியில் உட்காரவைத்த பரபரப்பான போட்டி அது. 

போட்டி டை ஆனதையடுத்து முடிவை பெறுவதற்காக வீசப்பட்ட சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது. இதையடுத்து பவுண்டரிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு கோப்பை இங்கிலாந்து அணிக்கு வழங்கப்பட்டது. பவுண்டரிகளின் அடிப்படையில் முடிவு தீர்மானிக்கப்பட்டதே கடும் சர்ச்சையானது. இறுதி போட்டியில் ஆடிய நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளுமே கோப்பைக்குத் தகுதியான அணிகள் தான். தார்மீக அடிப்படையில், இரு அணிகளுமே வெற்றி பெற்ற அணிகள் தான். 

வெகு சிறப்பாக ஆடியிருந்தும் கூட, துரதிர்ஷ்டவசமாக கோப்பையை வெல்ல முடியாமல் போனது, நியூசிலாந்து அணிக்கு பெரிய ஏமாற்றம்தான். அதை வில்லியம்சனே மறக்க நினைத்தாலும் செய்தியாளர்கள் அவரை மறக்கவிடுவதில்லை. செய்தியாளர் சந்திப்பின் போதெல்லாம், உலக கோப்பை குறித்து கேள்வி எழுப்புகின்றனர். அந்தவகையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாகவும் உலக கோப்பை குறித்து பேசினார் வில்லியம்சன்.

பவுண்டரிகளின் அடிப்படையில், உலக கோப்பை ஃபைனலின் முடிவு தீர்மானிக்கப்பட்டது சரியானது அல்ல. அதுதான் விதி என்பது அனைவருக்கும் தெரியும். அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனாலும் அது சரியல்ல. எந்தவொரு போட்டியின் முடிவும் அப்படி தீர்மானிக்கப்படக்கூடாது. அந்த விதியை மாற்றியது சரிதான். ஏனெனில் இனிமேல் கண்டிப்பாக அந்தமாதிரி முடிவு தீர்மானிக்கப்படக்கூடாது. சில முடிவுகளை தனியாக அமர்ந்து யோசித்து பார்த்தால் வேதனையாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். அப்படியான முடிவுதான் அது. அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் என்ன செய்வது? விதிமுறை அதுதானே.. என்று வில்லியம்சன் தெரிவித்துள்ளார். 
 

click me!