இந்திய அணியை பார்த்தா பெரிய ஆச்சரியமா இருக்கு..! மிரண்டுபோன பாக்., முன்னாள் ஜாம்பவான்

By karthikeyan VFirst Published Oct 7, 2022, 8:42 PM IST
Highlights

ஒரே சமயத்தில் 2 வெவ்வேறு சர்வதேச போட்டிகளில் ஆடுமளவிற்கு சர்வதேச தரத்திலான வீரர்கள் இந்திய அணியில் இருப்பதை கண்டு வியந்து புகழ்ந்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் காம்ரான் அக்மல்.
 

இந்திய கிரிக்கெட் மிதமிஞ்சிய சிறப்பான வீரர்களை பெற்றிருக்கிறது. ஒரே சமயத்தில் 2 வெவ்வேறு சர்வதேச போட்டிகளில் ஆடும் அளவிற்கு சர்வதேச அளவிலான தரமான வீரர்களை அதிகமாக பெற்றிருக்கிறது.

ஏற்கனவே இந்திய அணி, ஒரே சமயத்தில் 2 வெவ்வேறு போட்டிகளில் ஆடியிருக்கிறது. இப்போது கூட, ரோஹித் சர்மா தலைமையில் கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், புவனேஷ்வர் குமார், ரவிச்சந்திரன் அஷ்வின், சாஹல் ஆகிய முன்னணி வீரர்களை கொண்ட இந்திய அணி டி20 உலக கோப்பையில் ஆடுவதற்காக ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளது.

இதையும் படிங்க - 2023 ஒருநாள் உலக கோப்பைக்கு அணி தேர்வு செய்வது ரொம்ப கஷ்டம்.! பாவம் தேர்வாளர்கள் - விவிஎஸ் லக்‌ஷ்மண்

பும்ரா, ஜடேஜா, ஷமி ஆகிய சீனியர் வீரர்கள் ஃபிட்னெஸ் இல்லாமல் இருக்கின்றனர். இந்நிலையில், ஷிகர் தவான் தலைமையில் முழுக்க முழுக்க இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது.

ஷிகர் தவான், ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் ஆகிய பேட்ஸ்மேன்கள், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், சிராஜ், ஆவேஷ் கான், ஷர்துல் தாகூர் ஆகிய 11 வீரர்களுடன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆடியது இந்திய அணி. ராகுல் திரிபாதி, உம்ரான் மாலிக், ஷபாஸ் அகமது ஆகிய சிறந்த வீரர்களுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. அந்தளவிற்கு, சர்வதேச கிரிக்கெட்டில் ஆடுமளவிற்கான ஏகப்பட்ட திறமையான வீரர்களை கொண்ட அணியாக திகழ்கிறது இந்திய அணி.

சீனியர் வீரர்கள் ஆடாத போட்டிகளில் ஆட கிடைக்கும் வாய்ப்புகளை இளம் வீரர்கள் மிகச்சிறப்பாக பயன்படுத்தி கொள்கின்றனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 40 ஓவரில் 250 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்திய அணி விரட்டியபோது, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடினர். 37 பந்தில் 50 ரன்கள் அடித்தார் ஷ்ரேயாஸ் ஐயர். அவரது சிறப்பான பேட்டிங் நீர்த்துப்போகும் அளவிற்கு ஒரு அபாரமான இன்னிங்ஸை ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் சஞ்சு சாம்சன். 63 பந்தில் 86 ரன்களை குவித்தார் சாம்சன். 

ஆனாலும் இந்திய அணியால் இலக்கை அடிக்க முடியவில்லை. 40 ஓவரில் 240 ரன்கள் அடித்து 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி தோல்வியை தழுவியிருந்தாலும், ஒரே சமயத்தில் 2 வெவ்வேறு சர்வதேச போட்டிகளில் ஆடுமளவிற்கு வீரர்களை தயார் செய்திருக்கும் இந்திய கிரிக்கெட்டின் கட்டமைப்பை கண்டு வியந்த காம்ரான் அக்மல் இந்திய கிரிக்கெட்டை வெகுவாக புகழ்ந்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள காம்ரான் அக்மல், இந்திய கிரிக்கெட்டிற்கு இது மிகச்சிறந்த அறிகுறி. இந்திய அணி ஒரே சமயத்தில் 2 வெவ்வேறு சர்வதேச போட்டிகளில் ஆடுமளவிற்கான தரமான வீரர்களை உருவாக்கி வைத்துள்ளது. முன்னணி வீரர்கள் அடங்கிய இந்திய அணி டி20 உலக கோப்பையில் ஆடுவதற்காக ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளது. அதேவேளையில் இளம் வீரர்களை கொண்ட மற்றொரு இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடுகிறது.

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல; டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் தனி அணியை தயார் செய்து வைத்திருக்கிறது. இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பு மிகச்சிறப்பாக இருப்பதுதான் அதற்கு காரணம். 

இதையும் படிங்க - பும்ராவுக்கு நிகரான மற்றும் மிகச்சரியான மாற்று வீரர் அவர் மட்டும்தான்..! டேல் ஸ்டெய்ன் தரமான ஆலோசனை

தென்னாப்பிரிக்க அணி 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மழை பெய்து கண்டிஷன் கடினமாக இருந்தாலும், தென்னாப்பிரிக்க அணி அதன் முழு பலத்துடன் ஆடியதால் வெற்றி பெற்றுவிட்டது. தென்னாப்பிரிக்க அணி முழு பலத்துடன் ஆடியபோதிலும், மெயின் வீரர்கள் இல்லாத இரண்டாம் தர இந்திய அணிக்கு எதிராக போராடித்தான் வெற்றி பெற முடிந்ததே தவிர, எளிதாக வெற்றி பெற முடியவில்லை. இந்திய அணியின் மெயின் வீரர்கள் ஆடியிருந்தால் அந்த இலக்கை எளிதாக அடித்து இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும் என்று காம்ரான் அக்மல் தெரிவித்தார்.
 

click me!