கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம காம்ரான் அக்மல் செய்த செயல்.. தன்னடக்கத்தின் உச்சம் இதுதான்

By karthikeyan VFirst Published Oct 17, 2019, 4:57 PM IST
Highlights

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் சர்வதேச அளவில் ஆல்டைம் சிறந்த வீரர்களையோ அல்லது தங்களது சொந்த நாட்டு அணியின் ஆல்டைம் சிறந்த லெவனையோ தேர்வு செய்வது வழக்கம். 

அந்தவகையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் காம்ரான் அக்மல், பாகிஸ்தானின் ஆல்டைம் சிறந்த ஒருநாள் அணியை தேர்வு செய்துள்ளார். பாகிஸ்தான் அணியின் ஆல்டைம் சிறந்த தொடக்க வீரர்களாக சயீத் அன்வர் மற்றும் பாபர் அசாம் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் அக்மல். 

மூன்றாம் வரிசை வீரராக நீண்ட நெடிய அனுபவம் வாய்ந்த முகமது ஹஃபீஸையும் ஐந்தாம் வரிசைக்கும் நீண்ட அனுபவம் வாய்ந்த வீரரான ஷோயப் மாலிக்கையும் தேர்வு செய்துள்ளார். பொதுவாக இதுமாதிரியான ஆல்டைம் சிறந்த அணியை தேர்வு செய்யும் வீரர்கள், எவ்வளவு பெரிய லெஜண்டாக இருந்தாலும், தங்களது பெயரை அந்த அணியில் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள். 

ஆனால் தன்னடக்கத்தின் உச்சகட்ட செயலாக, காம்ரான் அக்மல் தனது பெயரை ஆல்டைம் பெஸ்ட் லெவனில் சேர்த்ததோடு, தனது தம்பியான உமர் அக்மலின் பெயரையும் அதில் சேர்த்துள்ளார். காம்ரான் அக்மலும் சரி, உமர் அக்மலும் சரி சீராக ஆடாமல், ஃபார்மில் இல்லாமல் சொதப்பியதால் அணியிலிருந்து நீக்கப்பட்டவர்கள். காம்ரான் அக்மல் மொத்தமாக ஒதுக்கப்பட்டுவிட்டார். உமர் அக்மல் 2  ஆண்டுகால இடைவெளிக்கு பின்னர் இலங்கை தொடரில் முதல் 2 டி20 போட்டிகளிலும் டக் அவுட்டாகி, டி20 கிரிக்கெட்டில் அதிக டக் அவுட்டானவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 

அண்ணனும் தம்பியும் தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் ஓரங்கட்டப்பட்ட நிலையில், கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் இருவரது பெயரையும் சேர்த்துள்ளார் காம்ரான் அக்மல். மேலும் ஆல்ரவுண்டர்கள் அஃப்ரிடி மற்றும் அப்துல் ரசாக் ஆகிய இருவரையும் தனது ஆல்டைம் அணியில் எடுத்துள்ளார். ஃபாஸ்ட் பவுலர்களாக வாசிம் அக்ரம் மற்றும் ஷோயப் அக்தர் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ள அக்மல், ஸ்பின்னராக சாக்லைன் முஷ்டாக்கை தேர்வு செய்துள்ளார். 

யூனிஸ் கான், முகமது யூசுஃப், இன்சமாம் உல் ஹக், மிஸ்பா உல் ஹக் ஆகிய பாகிஸ்தான் அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரைக்கூட காம்ரான் அக்மல் தேர்வு செய்யவில்லை. இவ்வளவு ஏன்? இளம் வீரர்களை வைத்துக்கொண்டு பாகிஸ்தான் அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுத்த இம்ரான் கானைக்கூட தேர்வு செய்யவில்லை காம்ரான் அக்மல்.

இம்ரான் கான், யூனிஸ் கான், இன்சமாம் உல் ஹக், முகமது யூசுஃப் ஆகியோரை விடவா இவரும் இவரது தம்பியும் சிறந்த வீரர்கள்? என்ற ஆதங்கத்தில் காம்ரான் அக்மலை நெட்டிசன்களும் கிரிக்கெட் ரசிகர்களும் கழுவி ஊற்றிவருகின்றனர். 

காம்ரான் அக்மல் தேர்வு செய்த ஆல்டைம் சிறந்த பாகிஸ்தான் அணி:

சயீத் அன்வர், பாபர் அசாம், முகமது ஹஃபீஸ், உமர் அக்மல், ஷோயப் மாலிக், அப்துல் ரசாக், ஷாஹித் அஃப்ரிடி, காம்ரான் அக்மல், வாசிம் அக்ரம், ஷோயப் அக்தர், சக்லைன் முஷ்டாக். 
 

click me!