கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட தொடக்க வீரர்.. நடந்தது என்ன..?

By karthikeyan VFirst Published Oct 17, 2019, 3:01 PM IST
Highlights

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து திமிரின் விளைவாக தொடக்க வீரர் அதிரடியாக நீக்கப்பட்டுளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரண்டிலுமே இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என வென்றுவிட்டது. 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் என்பதால், தொடரை இழந்தாலும் ஒவ்வொரு போட்டியில் பெறும் வெற்றியுமே முக்கியம். எனவே கடைசி போட்டியிலாவது வெல்லும் முனைப்பில் தென்னாப்பிரிக்க அணியும் கடைசி போட்டியிலும் வெல்லும் முனைப்பில் இந்திய அணியும் மோதவுள்ளன. வரும் 19ம் தேதி இந்த போட்டி ராஞ்சியில் தொடங்குகிறது. 

முதல் 2 போட்டிகளிலுமே தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே படுமோசமாக சொதப்பியது. டீன் எல்கர், டுப்ளெசிஸ், டி காக் ஆகியோர் மட்டுமே ஓரளவிற்கு ஆடிவருகின்றனர். இந்த தொடருக்காக இந்தியாவிற்கு வரும்போது செம ஃபார்மில் இருந்தார் தென்னாப்பிரிக்க தொடக்க வீரர் மார்க்ரம். பயிற்சி போட்டியில் கூட சிறப்பாக ஆடி சதமடித்தார்.

பயிற்சி போட்டியில் நன்றாக ஆடிய மார்க்ரம், அதன்பின்னர் ஆடிய 4 இன்னிங்ஸ்களில் ஒன்றில் கூட சரியாக ஆடவில்லை. 5, 39, 0, 0 இவைதான் நான்கு இன்னிங்ஸ்களில் மார்க்ரம் அடித்த ஸ்கோர். எனவே சரியாக ஆடாததால் ஏற்பட்ட விரக்தியை கோபமாக வெளிப்படுத்தியதில் மார்க்ரமின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது கையில் காயம் பலமாக இருப்பதால் அவரால் கடைசி போட்டியில் ஆடமுடியாது என்று தெரிவிக்கப்பட்டதால், கடைசி போட்டியிலிருந்து விலகியுள்ளார் மார்க்ரம். அவர் மேற்கொண்டு சிகிச்சை எடுப்பதற்காக, தொடர் முடிவதற்கு முன்னதாகவே தென்னாப்பிரிக்கா செல்கிறார். 

ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் ஷெஃபில்ட் ஷீல்டு தொடரில் டாஸ்மானியா அணிக்கு எதிரான போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவுட்டான விரக்தியில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ், சுவரில் குத்தியதில் கை எலும்பு முறிந்ததால், நவம்பர் 21 அன்று நடக்கவிருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆடமுடியாமல் போனது. இந்நிலையில் அவரைப்போலவே மார்க்ரமும் கையை உடைத்துக்கொண்டு போட்டியில் ஆடமுடியாத நிலைக்கு தன்னைத்தானே தள்ளியுள்ளார். 
 

click me!