தென்னாப்பிரிக்க வீரரை கெட்ட வார்த்தையில் திட்டிய பட்லர்.. ”என்ன முறைக்கிற”னு வரிந்துகட்டிய பென் ஸ்டோக்ஸ்.. ஒரு ஆளை 2 பேரு சேர்ந்து செய்த சம்பவம்.. வீடியோ

By karthikeyan VFirst Published Jan 9, 2020, 12:27 PM IST
Highlights

தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க வீரர் பிளாண்டரை பட்லர் கெட்ட வார்த்தையில் திட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 

தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது போட்டி கடந்த 3ம் தேதி தொடங்கி கேப்டவுனில் நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 269 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணியை இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர்கள் பெரிய ஸ்கோரை அடிக்கவிடாமல் சுருட்டினர். அதிலும் குறிப்பாக அபாரமாக பந்துவீசிய ஆண்டர்சன், தனது அனுபவத்தை பயன்படுத்தி தென்னாப்பிரிக்க விக்கெட்டுகளை வீழ்த்தி குவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 28வது முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இங்கிலாந்து பவுலிங்கில் தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கே சுருண்டது. 

46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் சிப்ளி சதமடித்தார். பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடி 34 பந்தில் அரைசதமடித்தார். வெறும் 47 பந்தில் 72 ரன்களை குவித்த ஸ்டோக்ஸ், இங்கிலாந்து அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. வலுவான முன்னிலையை பெற ஸ்டோக்ஸின் இன்னிங்ஸ் உதவியது. 

இரண்டாவது இன்னிங்ஸை 46 ரன்கள் முன்னிலையுடன் ஆடிய இங்கிலாந்து அணி, 391 ரன்களை குவித்து, மொத்தமாக 437 ரன்கள் முன்னிலை பெற்று, 438 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. கடினமான இலக்குடன் நான்காம் நாள் ஆட்டத்தின் இரண்டாவது செசனில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது தென்னாப்பிரிக்க அணி.

இலக்கு கடினமானது என்பதால், ஜெயிக்கிறமோ இல்லையோ, ஆனால் தோற்றுவிடக்கூடாது என்பதில் தென்னாப்பிரிக்கா உறுதியாக இருந்தது. தொடக்க வீரர்கள் பீட்டர் மாலனும் டீன் எல்கரும் இணைந்து நிதானமாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 71 ரன்களை சேர்த்தனர். எல்கர் 34 ரன்களில் ஆட்டமிழக்க, ஹம்சா, மஹாராஜ், டுப்ளெசிஸ் ஆகியோர் சோபிக்கவில்லை. முடிந்தவரை அதிகமான பந்துகளை ஆடி, இவர்கள் ஆட்டமிழந்தனர். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று மிகச்சிறப்பாக ஆடினார் பீட்டர் மாலன். நான்காம் நாள் முடிவில் எல்கர் மற்றும் ஹம்சாவின் விக்கெட்டுகளை இழந்திருந்த தென்னாப்பிரிக்கா, கடைசி நாள் ஆட்டம் தொடங்கியதுமே, நைட் வாட்ச்மேனாக இறங்கியிருந்த மஹாராஜின் விக்கெட்டை இழந்தது. அதன்பின்னர் டுப்ளெசிஸும் அவுட்டாக, மாலனுடன் இணைந்து சிறப்பாக ஆடி, தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடினார் வாண்டெர் டசன்.

களத்தில் நங்கூரமிட்டு சதத்தை நெருங்கிய மாலன் 84 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த குயிண்டன் டி காக் 107 பந்தில் 50 ரன்கள் அடித்து ஜோ டென்லியின் பந்தில் அவுட்டானார். 140 பந்தில் 17 ரன்கள் அடித்திருந்த டசனை ஸ்டூவர்ட் பிராட் வீழ்த்தினார். இதையடுத்து ஆட்டம் இங்கிலாந்தின் பக்கம் திரும்பியது. 

பிளாண்டரும் பிரிட்டோரியஸும் தோல்வியை தவிர்க்க போராடினர். தென்னாப்பிரிக்க அணியை தோல்வியிலிருந்து மீட்க, பிளாண்டர் கடுமையாக போராடி கொண்டிருந்தபோதுதான் சர்ச்சை சம்பவம் ஒன்று நடந்தது. தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் அடித்திருந்த நிலையில், தோல்வியை தவிர்க்க இன்னும் 20 ஓவர்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலையில், பிளாண்டரும் பிரிட்டோரியஸூம் களத்தில் இருந்தனர்.

அப்போது பிளாண்டர் அடித்த பந்தை ஃபீல்டர் பிடித்து, விக்கெட் கீப்பர் பல்டரிடம் வீசினார். அந்த பந்து கீப்பரிடம் வருவதை கடைசி நேரத்தில் கவனித்த பிளாண்டர் சட்டென்று விலகியதால், அதை பிடிப்பது பட்லருக்கு சவாலானது. அதனால் சற்று பதற்றமடைந்தார் பட்லர். அதனால் கடுப்பான பட்லர், F***ing, முட்டாள் விலகி நிற்கமாட்டாயா என்று கடுமையாக திட்டினார். இதையடுத்து பட்லரை பார்த்து முறைத்தார் பிளாண்டர். உடனே, என்ன முறைக்கிறாய், அவர்(பட்லர்) கரெக்ட்டா தானே சொன்னார் என்கிற ரீதியில் பிளாண்டரை விளாசினார் முதல் ஸ்லிப்பில் ஃபீல்டிங் செய்த பென் ஸ்டோக்ஸ். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

It's all fun and games when the wickie chirps the batsmen...but this is just terrible from Buttler!! pic.twitter.com/eUVOc0ZQzC

— Gillian Price (@Gillian_Price)

பிளாண்டர் கடுமையாக போராடினாலும், அது பலனளிக்கவில்லை. பிளாண்டர், ப்ரிட்டோரியஸ், நோர்ட்ஜே ஆகிய மூவரையும் ஸ்டோக்ஸ் வீழ்த்தினார். இதையடுத்து தென்னாப்பிரிக்க அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 

click me!