நாங்க தனித்தனியா நல்லா விளையாடுறோம்; ஆனால் ஒரு டீமா ஒற்றுமையா இல்ல! உண்மையை ஒப்புக்கொண்ட இங்கி., சீனியர் வீரர்

By karthikeyan VFirst Published Jan 2, 2022, 9:36 PM IST
Highlights

இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் தனித்தனியாக ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தவல்ல வீரர்கள் தான் என்றாலும், ஒரு அணியாக இணைந்து சரியாக ஆடவில்லை என்று ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.
 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரியமான டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. இரு அணிகளுக்குமே ஆஷஸ் தொடர் என்பது உலக கோப்பை போல. எனவே இரு அணிகளும் ஆஷஸ் தொடரில் வெறித்தனமாக விளையாடும். ஆனால் நடப்பு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி படுமட்டமாக ஆடிவருகிறது.

5  போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் 3 போட்டிகளிலும் தோற்று தொடரை இழந்தது இங்கிலாந்து அணி. 3 போட்டிகளிலுமே இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே படுமோசமாக விளையாடியது. இந்த தொடரின் கடைசி 2 போட்டிகளிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

ஜோ ரூட் பேட்டிங்கில் தனி நபராக இங்கிலாந்துக்காக போராடுகிறார். அவர் பேட்டிங்கில் அசத்தினாலும், அவரது கேப்டன்சி மோசமாக உள்ளது. 2021ம் ஆண்டில் 9 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதன்மூலம் ஓராண்டில் அதிகமான டெஸ்ட் தோல்வியடைந்த அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் இந்தளவிற்கு படுமட்டமாக வேறு ஒரு அணி விளையாடி பார்த்ததில்லை என்று ரிக்கி பாண்டிங் விமர்சித்திருந்தார். ரூட்டின் கேப்டன்சி கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. 

ஜோ ரூட் சிறப்பாக பேட்டிங் ஆடினாலும், ஒரு கேப்டனாக அணியை ஒன்றுதிரட்டி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, நல்ல வியூகங்களுடன் வெற்றியை பறிக்கும் உத்தி அவருக்கு தெரியவில்லை. இங்கிலாந்து அணி ஆடுவதை பார்க்கையில், அந்த அணியில் ஒற்றுமை இல்லை என்பதும், அவர்கள் அணியாக இணைந்து ஆடவில்லை என்பதும் அப்பட்டமாக தெரிந்தது. தோல்விக்கு பிறகு கேப்டனை மட்டும் விட்டுவிட்டு வீரர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஓய்வறைக்கு சென்றுவிட்டதை முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், இந்த விஷயம் குறித்து பேசியுள்ள ஜோஸ் பட்லர், எங்கள் அணியின் இப்போதைய நிலை அதிருப்தியும் விரக்தியும் அளிக்கிறது. இந்த ஆஷஸ் தொடர் தொடங்கும்போது இந்த தொடரில் நாங்கள் எப்படி ஆடவேண்டும் என்று நினைத்தோமோ அப்படி ஆடவில்லை. நாங்கள் ஒரு அணியாக இணைந்து ஆடவில்லை. தனித்தனியாக ஒவ்வொரு வீரரும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தவல்லவர்கள் தான் என்றாலும், அணியாக இணைந்து ஆடாததால் வெற்றி பெற முடியவில்லை. கண்டிப்பாக 5-0 என ஒயிட்வாஷ் ஆக விரும்பவில்லை என்று ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
 

click me!