ஜோஸ் பட்லர் அதிரடி சதம்..! தனி ஒருவனாக இங்கிலாந்தை கரைசேர்த்த பட்லர்.. இலங்கைக்கு கடின இலக்கு

By karthikeyan VFirst Published Nov 1, 2021, 9:30 PM IST
Highlights

ஜோஸ் பட்லரின் அதிரடி சதத்தால் இலங்கைக்கு 164 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து அணி.
 

டி20 உலக கோப்பையின் இன்றைய போட்டியில் இங்கிலாந்தும் இலங்கையும் ஆடிவருகின்றன. இதற்கு முன் ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஒரு அடியை எடுத்து அரையிறுதிக்குள் வைத்துவிட்ட இங்கிலாந்து அணியும், அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணியும் களமிறங்கின.

ஷார்ஜாவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இங்கிலாந்து அணி இந்த டி20 உலக கோப்பை தொடரில் ஆடிய 3 போட்டிகளிலும் இலக்கை விரட்டிய நிலையில் இந்த போட்டியில் தான் முதல்முறையாக முதலில் பேட்டிங் ஆடியது. அதனால் இங்கிலாந்து அணி பேட்டிங்கிற்கு சவாலான ஷார்ஜா ஆடுகளத்தில் எப்படி பேட்டிங் ஆடுகிறது என்பதை பார்க்க மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராயை 9 ரன்னில் ஹசரங்கா வீழ்த்தினார். இதையடுத்து டேவிட் மலானை 6 ரன்னுக்கு சமீரா வீழ்த்த, ஜானி பேர்ஸ்டோவை ரன்னே அடிக்கவிடாமல் டக் அவுட்டாக்கினார் ஹசரங்கா. அதனால் 5.2 ஓவரில் 35 ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது இங்கிலாந்து அணி.

அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய முக்கியமான கட்டத்தில், ஜோஸ் பட்லரும் கேப்டனு மோர்கனும் இணைந்து நிதானம் காத்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 12-13 ஓவர் வரை நிதானம் காத்த இருவரும் அதன்பின்னர் அடித்து ஆட தொடங்கினர். கடந்த ஓராண்டாகவே ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த ஒயின் மோர்கன், இந்த போட்டியில் சில பெரிய ஷாட்டுகளை ஆடி ஃபார்முக்கு வந்தார்.

ஏற்கனவே அருமையான ஃபார்மில் இருக்கும் பட்லர், சின்ன மைதானமான ஷார்ஜாவில் சிக்ஸர் மழை பொழிந்தார். அரைசதத்திற்கு பின்னர், வேற லெவலில் அடித்து ஆடிய பட்லர் 66 பந்தில் 95 ரன்கள் அடித்திருக்க, இன்னிங்ஸின் கடைசி பந்தில் அவர் சதத்தை எட்ட சிக்ஸர் தேவைப்பட்டது. துஷ்மந்தா சமீரா அந்த பந்தை ஃபுல் டாஸாக வீச, அதை லாவகமாக லெக் திசையில் சிக்ஸருக்கு விரட்டி சதத்தை எட்டினார் பட்லர். இதுதான் டி20 கிரிக்கெட்டில் பட்லரின் முதல் சதம்.

பட்லரின் அதிரடி சதம்(101) மற்றும் மோர்கனின் பொறுப்பான பேட்டிங்கால்(40) 20 ஓவரில்ம் 163 ரன்களை குவித்த இங்கிலாந்து அணி, 163 ரன்கள் என்ற கடின இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது. 163 ரன்கள் என்பது பேட்டிங்கிற்கு சவாலான ஸ்லோ பிட்ச்சான ஷார்ஜா பிட்ச்சில் கண்டிப்பாகவே கடினமான இலக்கு.
 

click me!