ஆரம்பமே அதகளம்.. வார்னரை அலறவிட்டு அவுட்டாக்கிய ஆர்ச்சர்.. திட்டத்தை மாற்றிய ஆஸி., அணி; முறியடித்த மார்க் உட்

By karthikeyan VFirst Published Sep 6, 2020, 7:09 PM IST
Highlights

முதல் ஓவரின் 3வது பந்திலேயே டேவிட் வார்னரை வீழ்த்தினார் ஜோஃப்ரா ஆர்ச்சர்.
 

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி சவுத்தாம்ப்டனில் இன்று நடந்துவருகிறது.

இந்திய நேரப்படி 6.45 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளுமே ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யாமல் முதல் போட்டியில் ஆடிய அதே வீரர்களுடன் தான் களமிறங்கின.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னரும் ஆரோன் ஃபின்ச்சும் களமிறங்கினர். இங்கிலாந்து அணி சார்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் முதல் ஓவரை வீசினார். முதல் 2 பந்துகளையும் நல்ல லைன் அண்ட் லெந்த்தில் மிரட்டலாக வீசிய ஆர்ச்சர், 3வது பந்திலேயே வார்னரை வீழ்த்தினார். 

2வது பந்தை 147 கிமீ வேகத்தில் செம பவுன்ஸராக வீசி வார்னரை மிரட்டிய ஆர்ச்சர், அடுத்த பந்தை சரியான லைன்&லெந்த்தில் 146 கிமீ வேகத்தில் வீச, அதை திறம்பட எதிர்கொள்ள முடியாமல் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வார்னர் ஆட்டமிழந்தார். ஆனால் அது அவுட்டில்லை என்பது போல, மிக நம்பிக்கையுடன், களநடுவர் அவுட் கொடுத்த மாத்திரத்தில் ரிவியூ செய்தார் வார்னர். ஆனால் பந்து வார்னரின் க்ளௌசை உரசிச்சென்றதால் வார்னரும் வெளியேறினார்; ரிவியூவும் வீணானது.

இதையடுத்து மூன்றாம் வரிசையில் ஸ்டீவ் ஸ்மித்தை இறக்காமல் அலெக்ஸ் கேரி இறக்கப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலிய அணியின் இந்த பேட்டிங் ஆர்டர் மாற்ற திட்டம் பலனளிக்கவில்லை. 2வது ஓவரிலேயே மார்க் உட்டின் பந்தில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் கொடுத்து 2 ரன்னில் வெளியேறினார். முதல் 2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், ஃபின்ச்சுடன் ஸ்டீவ் ஸ்மித் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்துள்ளார். இந்த ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்புடன் ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
 

click me!