இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் ஜாம்பவான்..?

By karthikeyan VFirst Published Jul 22, 2019, 10:05 PM IST
Highlights

இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி மீண்டும் விண்ணப்பிப்பார் என்று தெரிகிறது. 

இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. இந்நிலையில் புதிய பயிற்சியாளர்கள் பதவிக்காக விண்ணப்பிக்க பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் தான் தற்போதிருக்கும் பயிற்சியாளர் குழுவின் கடைசி  தொடர். இந்நிலையில், புதிய பயிற்சியாளருக்கான பதவிக்கு பலர் விண்ணப்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது. இந்திய அணியின் மிடில் ஆர்டர் உட்பட சில சிக்கல்களை கலைந்து இந்திய அணியை மேலும் வலுவாக்கும் பணி புதிய பயிற்சியாளராக வருவதற்கு உள்ளது.

இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி மீண்டும் விண்ணப்பிப்பார் என்று தெரிகிறது. அதேபோல சன்ரைசர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய டாம் மூடியும் விண்ணப்பிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்காகத்தான் டாம் மூடி சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனேவும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயவர்தனே தலைசிறந்த வீரர். சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர். நல்ல பேட்டிங் டெக்னிக் கொண்ட வீரர் மட்டுமல்லாது நீண்ட அனுபவம் கொண்டவர் என்பதால் அவர் பயிற்சியாளரானால் இந்திய அணிக்கு நல்லதுதான்.

மஹேலா ஜெயவர்தனே 2015ம் ஆண்டு இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆலோசகராக இருந்தார். அதன்பின்னர் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக 2017ம் ஆண்டிலிருந்து இருந்துவருகிறார். இவர் மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளராக இருந்த 3 சீசன்களில் 2017 மற்றும் 2019 ஆகிய இரண்டு சீசன்களிலும் அந்த அணி கோப்பையை வென்றது. ஜெயவர்தனே அவர் ஆடிய காலத்தில் மிகச்சிறந்த வீரர் மட்டுமல்லாது நல்ல பயிற்சியாளராகவும் திகழ்ந்துள்ளார். ஆனால் அவர் மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் பதவியில் இன்னும் நீடித்துவருவதால், அவர் விண்ணப்பிப்பது உறுதியல்ல. அதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இல்லை. ஆனால் அவர் விண்ணப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!