வரலாற்று சாதனை படைக்கப்போகும் ஆண்டர்சன்..! ஆர்வத்துடன் எதிர்நோக்கும் கிரிக்கெட் உலகம்

By karthikeyan VFirst Published Aug 13, 2020, 2:15 PM IST
Highlights

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆண்டர்சன் புதிய மைல்கல்லை எட்டி வரலாற்றுச்சாதனை படைக்கவுள்ளார். இந்த போட்டியில் இல்லாவிட்டாலும் அடுத்த போட்டியில் உறுதி.
 

இங்கிலாந்து அணியில் 2002ம் ஆண்டிலிருந்து தற்போது வரை ஆடிவரும் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஏற்கனவே ஓய்வு அறிவித்துவிட்டு, டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடிவருகிறார்.

இங்கிலாந்து அணிக்காக 154 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 590 விக்கெட்டுகளை வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஃபாஸ்ட் பவுலராக திகழ்கிறார் ஆண்டர்சன். ஃபாஸ்ட் பவுலர் நீண்டகாலத்திற்கு சர்வதேச கிரிக்கெட்டில் நீடிப்பது அரிதான காரியம். ஆனால் ஆண்டர்சன், தனது வேலைப்பளுவை குறைக்கும் விதமாக, சரியான நேரத்தில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றதால், அவரால் ஃபிட்னெஸை பராமரித்து டெஸ்ட் போட்டிகளில் ஆட முடிகிறது. 

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் அந்த போட்டியில் ஆண்டர்சன் விக்கெட் எடுக்க முடியாமல் திணறினார். பிராட், வோக்ஸ், பெஸ், ஆர்ச்சர் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்த, ஆண்டர்சன் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். 

இதையடுத்து ஆண்டர்சன், ஃபார்மில் இல்லை; வயதும் அதிகமாகிவிட்டதால் அவரது ஓய்வு குறித்து ஒரு டாக் ஓடியது. இந்நிலையில், அதுகுறித்து தெளிவுபடுத்தினார் ஆண்டர்சன். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பாக, லாக்டவுன் சமயத்தில், லாக்டவுனால் தனக்கு போதுமான ஓய்வு கிடைத்ததால், இன்னும் 2 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் ஆட தனது உடம்பு ஒத்துழைக்கும் என இன்னும் 2 ஆண்டுகளுக்கு ஓய்வு பெறும் ஐடியா இல்லை என்பதை ஆண்டர்சன் வெளிப்படுத்தியிருந்தார். 

ஆண்டர்சன் பாகிஸ்தானுக்கு எதிரான இன்று தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டியில் வரலாற்று சாதனை படைக்க காத்திருக்கிறார். இதுவரை 590 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஆண்டர்சன், இன்னும் 10 விக்கெட் வீழ்த்தினால், 600 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் ஃபாஸ்ட் பவுலர் என்ற சாதனையை படைப்பார். 

இதுவரை முத்தையா முரளிதரன்(800), ஷேன் வார்ன்(708), அனில் கும்ப்ளே(619) ஆகிய மூவர் மட்டும்தான் 600 விக்கெட்டுகளுக்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தியவர்கள். மூவருமே ஸ்பின்னர்கள். ஃபாஸ்ட் பவுலர்கள் யாருமே இதுவரை 600  விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டவில்லை. மெக்ராத் 563 விக்கெட்டுகளுடன் ஆண்டர்சனுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். 

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று சவுத்தாம்ப்டனில் தொடங்குகிறது. இந்த போட்டியில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தினால், ஆண்டர்சன் 600 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டி வரலாற்று சாதனை படைப்பார். ஆனால் ஒரே போட்டியில் 10 விக்கெட்டுகள் வீழ்த்துவது கடினமான காரியம். இந்த போட்டியில் முடியாவிட்டாலும், கண்டிப்பாக அடுத்த போட்டியில் இந்த மைல்கல்லை எட்டிவிடுவார் ஆண்டர்சன். 
 

click me!