38 வயசுலயும் வெறித்தனமா வீசி மெக்ராத், ரிச்சர்ட் ஹாட்லியின் சாதனைகளை தகர்த்த ஆண்டர்சன்..!

By karthikeyan VFirst Published Jan 23, 2021, 11:18 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய ஆண்டர்சன், முன்னாள் லெஜண்ட் பவுலர்களான மெக்ராத் மற்றும் ரிச்சர்ட் ஹாட்லியின் சாதனைகளை தகர்த்துள்ளார்.
 

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இங்கிலாந்து அணி, முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்றது. 2வது டெஸ்ட் நடந்துவருகிறது. 2வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில், ஆஞ்சலோ மேத்யூஸின் சதம் மற்றும் டிக்வெல்லா, சண்டிமால், தில்ருவான் பெரேரா ஆகிய மூவரின் பொறுப்பான அரைசதத்தால் 381 ரன்கள் அடித்தது. 

இங்கிலாந்து அணி சார்பில் அந்த அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிகபட்சமாக ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் அடித்துள்ளது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆறு விக்கெட் வீழ்த்திய ஆண்டர்சன், ரிச்சர்ட் ஹாட்லி மற்றும் மெக்ராத்தின் சாதனைகளை முறியடித்துள்ளார். 38 வயதில் துணைக்கண்டத்தில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், துணைக்கண்டத்தில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வயதுமூத்த ஃபாஸ்ட் பவுலர் என்ற ரிச்சர்ட் ஹாட்லியின் சாதனையை முறியடித்துள்ளார். ரிச்சர்ட் ஹாட்லி அவரது 37வது வயதில் துணைக்கண்டத்தில் ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.

ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது இது 30வது முறை. இதன் மூலம், 29 முறை ஐந்து விக்கெட் வீழ்த்திய மெக்ராத்தின் சாதனையையும் தகர்த்துள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் முத்தையா முரளிதரன்(67) மற்றும் 2ம் இடத்தில் ஷேன் வார்ன்(37) ஆகிய இருவரும் உள்ளனர்.
 

click me!