என் கிரிக்கெட் கெரியரில் மிகப்பெரிய வருத்தம் இதுதான்.. ஓய்வுபெற்ற இர்ஃபான் பதான் வேதனை

By karthikeyan VFirst Published Jan 5, 2020, 5:40 PM IST
Highlights

19 வயதிலேயே இந்திய அணியில் அறிமுகமாகி, தனது 27வது வயதில் எல்லாம், கெரியரின் உச்சத்தில் இருந்து பின்னர் காணாமல் போன இர்ஃபான் பதான், தனது கிரிக்கெட் கெரியரின் தீராத வேதனை ஒன்றை பகிர்ந்துள்ளார். 

இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான இர்ஃபான் பதான் நேற்று ஓய்வு அறிவித்தார். 2003ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான இர்ஃபான் பதான் 2012ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக ஆடினார். 29 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1105 ரன்களையும் 100 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 120 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1544 ரன்களை அடித்துள்ளதோடு 173 விக்கெட்டுகளையும் இர்ஃபான் பதான் வீழ்த்தியுள்ளார்.  

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் வீழ்த்திய இரண்டாவது இந்திய பவுலர் இர்ஃபான் பதான்.  ஹர்பஜன் சிங்கிற்கு அடுத்தபடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் வீழ்த்தியது அவர் தான். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், சல்மான் பட், யூசுஃப், யூனிஸ் கான் ஆகிய சிறந்த வீரர்களை அடுத்தடுத்த பந்தில் வீழ்த்தியவர். 

2012ம் ஆண்டுக்கு பிறகு இர்ஃபான் பதான் இந்திய அணியில் ஆடவில்லை. ஐபிஎல்லில் 2017ம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணியில் இருந்தார். அதன்பின்னர் கடந்த 2 சீசன்களிலும் ஆடவில்லை. இந்நிலையில் அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் இர்ஃபான் பதான் ஓய்வு அறிவித்துள்ளார். மிகக்குறுகிய காலமே ஆடியிருந்தாலும், இந்திய கிரிக்கெட்டின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக பெயர் பெற்றவர்.

தனது 19வது வயதிலேயே இந்திய அணியில் இடம்பிடித்த இர்ஃபான் பதானின் கெரியர் 27-28 வயதிலேயே முடிந்துவிட்டது. அதுதான் தனக்கு வருத்தமான சம்பவம் என்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள இர்ஃபான் பதான், நிறைய வீரர்கள் 27-28 வயதில் தான் கெரியரை தொடங்கவே செய்வார்கள். 27 வயதில் தொடங்கி, 35 வயது வரையாவது ஆடுவார்கள். ஆனால் 27 வயதிலேயே, 301 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தி, அந்த வயதிலேயே எனது கெரியரின் உச்சத்தில் இருந்த எனது கெரியர் அத்துடன் முடிந்துவிட்டது. இன்னும் சில ஆண்டுகள் இந்திய அணிக்காக ஆடி 500-600 விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை என்பது எனக்கு மிகப்பெரிய வருத்தம். நான் ஒதுக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்றெல்லாம் பிற்காலத்திற்கு சென்று நான் ஆராய விரும்பவில்லை. ஆனால் அது எனக்கு மிகப்பெரிய வருத்தம் என்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். 
 

click me!