
2025 ஐபிஎல் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்துள்ளது. வலுவான பேட்டிங் கொண்ட பஞ்சாப் அணி 191 ரன்கள் இலக்குடன் சேஸ் செய்ய உள்ளது.
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை முதலில் பேட்டிங் செய்ய வந்தது.
தொடக்க வீரர் பில் சால்ட் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜேமிசன் வீசிய பந்தை சிக்ஸராக மாற்ற முயன்றபோது ஸ்ரேயாஸ் அய்யரிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து வந்த மயங் அகர்வால் 18 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து, சஹல் வீசிய முதல் ஓவரில் அர்ஷ்தீப் சிங்கிடம் கேட் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ரஜத் பட்டிதாரும் கோலியும் நிதானமான ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
2 சிக்ஸர்கள் அடித்து அதிரடியைத் தொடங்கிய பட்டிதார், 26 ரன்களில் ஜேமிசன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். பவுண்டரி அடிக்க திணறிவந்த விராட் கோலி 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அஸ்மதுல்லா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். பவர்பளேயில் 10 பந்துகளை எதிர்கொண்ட கோலி ஒரு பவுண்டரி உள்பட 13 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
கோலி வெளியேறிய பிறகு, ஜிதேஷ் சர்மா ஜேமிசன் வீசிய 17வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டார். லியாம் லிவிங்ஸ்டனும் தன் பங்கிற்கு ஒரு சிக்ஸ் அடித்தார். ஆனால், அடுத்த பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். அவர் 15 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். அதிரடி வீரர் ரொமாரியோ ஷெப்பர்டு 9 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்து அர்ஷ்தீப் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். க்ருனால் பாண்டியா கடைசி ஓவரில் பந்தைத் தூக்கி அடித்து, 4 ரன்னில் அவுட்டானார்.
பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் பவுலர்களை சிறப்பாகக் கையாண்டார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்துகொண்டிருந்ததால் பெங்களூரு அணியின் ரன் சேர்க்கும் வேகம் குறைந்தது. 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது.