
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எனப்படும் பிசிசிஐயின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது சாம்பியனானது. அதன் பிறகு இதுவரையில் 16 சீசன்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில், எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் தலா 5 முறை டிராபியை கைப்பற்றியுள்ளன.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறை, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெக்கான் சார்ஜர்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறை டிராபியை கைப்பற்றியுள்ளன. இந்த நிலையில் தான் 2024 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் முதல் முறையாக கடந்த ஆண்டு துபாயில் நடந்தது. இந்த ஏலத்தில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு வீரர் 20 கோடிக்கும் அதிகமாக ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இதே போன்று ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி நடக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால், இந்தியாவில் பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது. ஆனால், தேர்தலுக்கான தேதி மட்டும் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பிறகு ஐபிஎல் 2024 தொடர் ஆரம்பிக்கும் தேதியானது உறுதி செய்யப்படும்.
தேர்தல் நடந்தாலும் இந்தியாவில் தான் ஐபிஎல் 2024 தொடர் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் வரும் ஜூன் 1 ஆம் தேதி டி20 உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ள நிலையில், மே 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஐபிஎல் இறுதிப் போட்டி நடக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.