முக்கியமான ஆளே கேப்டன் தான்; நீயா களத்துல இறங்கி ஆடப்போற..! பாக்., தேர்வாளர், கோச்சை வெளுத்துவாங்கிய இன்சமாம்

By karthikeyan VFirst Published Mar 18, 2021, 6:47 PM IST
Highlights

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் கருத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தலைமை தேர்வாளர் மற்றும் பயிற்சியாளரை கடுமையாக விமர்சித்தார் இன்சமாம் உல் ஹக்.
 

பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் ஆடுகிறது. அதன்பின்னர் அப்படியே ஜிம்பாப்வே சென்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் ஆடுகிறது.

இந்த சுற்றுப்பயணங்களுக்கான பாகிஸ்தான் டி20 அணி தேர்வு கேப்டன் பாபர் அசாமுக்கு திருப்தியளிக்கவில்லை. அணி தேர்வு குறித்த தனது அதிருப்தியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரியப்படுத்தினார் கேப்டன் பாபர் அசாம். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுதொடர்பாக பாகிஸ்தான் அணியின் தலைமை தேர்வாளர் முகமது வாசிம் மற்றும் கேப்டன் பாபர் அசாமுக்கு இடையே வாக்குவாதமும் நடந்திருக்கிறது. கேப்டனின் கருத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் மதிக்கப்படாத நிலையில், பயிற்சியாளர் மற்றும் தலைமை தேர்வாளர் ஆகிய இருவரையும் கடுமையாக விளாசியுள்ளார் இன்சமாம் உல் ஹக்.

இதுகுறித்து தனது யூடியூபில் பேசிய இன்சமாம் உல் ஹக், பாபர் அசாமிற்கு அணி தேர்வில் உடன்பாடில்லை. அது உன் பிரச்னையல்ல என்று தலைமை தேர்வாளர் முகமது வாசிம், பாபர் அசாமிடம் தெரிவித்திருக்கிறார். எப்படி ஒரு கேப்டனிடம் அப்படி சொல்ல முடியும்? இது வியப்பாக இருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பாலிசிக்கள் முகமது வாசிமுக்கு தெரியுமா? அணி தேர்வில் கேப்டனுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. 

அணி தேர்வில் முக்கியமான நபரே கேப்டன் தான். இதை நான் பலமுறை கூறியிருக்கிறேன். தலைமை தேர்வாளரோ, பயிற்சியாளரோ களத்தில் இறங்கி ஆடப்போவதில்லை. கேப்டன் களத்தில் இறங்கி அணியை வழிநடத்துபவர். அவரது கருத்தை கேட்டு, அதற்கு மதிப்பளித்துத்தான் அணியை தேர்வு செய்ய வேண்டும் என்று இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
 

click me!