தன்னோட இடத்தை துபேவிற்கு தாரைவார்த்தது ஏன்..? சூட்சமத்தை சொன்ன கோலி

By karthikeyan VFirst Published Dec 9, 2019, 5:03 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் லெஜண்ட் பேட்ஸ்மேன் விராட் கோலியின் பேட்டிங் வரிசையில் இறங்கி, தன்னை அந்த இடத்தில் இறக்கியதை தனது அபாரமான பேட்டிங்கின் மூலம் நியாயப்படுத்தினார் ஷிவம் துபே.
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் விராட் கோலி. தொடக்க வீரர் விரைவில் ஆட்டமிழந்துவிட்டால், முதல் ஓவரிலேயே களத்திற்கு வரவும் நேரிடும். தொடக்க ஜோடி வெகு சிறப்பாக ஆடினால், நீண்ட நேரம் கழித்தும் இறங்க நேரிடும். இவ்வாறு இரண்டுவிதமான சூழல்களிலும் இறங்கி ஆடவேண்டிய வலுவான நிலையை மூன்றாம் வரிசை வீரர் பெற்றிருக்க வேண்டும். 

அந்தவகையில், கஷ்டமான அந்த பேட்டிங் ஆர்டரில் இறங்கி, இந்திய அணிக்கு சேஸிங்கில் பல வெற்றிகளை குவித்து கொடுத்த விராட் கோலி, முதல் பேட்டிங்கிலும் நல்ல ஸ்கோரை எட்டவைத்திருக்கிறார். அந்த வகையில், விராட் கோலியின் பேட்டிங் ஆர்டரான மூன்றாம் வரிசையில் இறங்கி ஆடுவது மிகவும் கடினமான காரியம்.

அப்படியிருக்கையில், விராட் கோலியும் அணி நிர்வாகமும் ஷிவம் துபே மீது நம்பிக்கை வைத்து மூன்றாம் வரிசையில் இறக்கினர். கேப்டன் கோலியும் அணி நிர்வாகமும் தன் மீது வைத்த நம்பிக்கையை வீணடிக்காமல் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து அசத்தினார் ஷிவம் துபே.

களத்திற்கு வந்த ஆரம்பத்தில் ஷாட்டுகள் சரியாக கனெக்ட் ஆகாமலும் டைமிங் இல்லாமலும் திணறினார். அதன்பின்னர் களத்தில் நிலைத்த பிறகு, அபாரமான ஷாட்டுகளை அசால்ட்டாக ஆடி சிக்ஸர் மழை பொழிந்தார். முதல் 15 பந்தில் தடுமாறிய ஷிவம் துபே, அடுத்த 15 பந்தில் வேற லெவலில் ஆடினார். வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கை வெளுத்து வாங்கிய ஷிவம் துபே, 30 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 54 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 

ஷிவம் துபேவின் அதிரடியான பேட்டிங்கால்தான் இந்திய அணி 170 ரன்களையே எட்டியது. இல்லையெனில் இதைக்கூட எட்டியிருக்க முடியாது. அறிமுக இன்னிங்ஸிலேயே, அதுவும் விராட் கோலியின் பேட்டிங் ஆர்டரில் இறங்கி அரைசதம் அடித்து அசத்தினார் ஷிவம் துபே. 

விராட் கோலி தனது பேட்டிங் ஆர்டரையே தாரை வார்த்ததற்கு தகுதியான வீரர் தான் என்பதை நிரூபித்தார் துபே. இந்நிலையில், போட்டிக்கு பின்னர் துபேவை மூன்றாம் வரிசையில் இறக்கியது குறித்து பேசிய கேப்டன் கோலி, இந்த ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமானது என்பது தெரிந்தது. எனவே ஷிவம் துபேவை மூன்றாம் வரிசையில் இறக்கிவிட்டு, ஸ்பின் பவுலிங்கை அடித்து துவம்சம் செய்வதுதான் திட்டம். அந்த திட்டம் ரொம்ப சரியாக ஒர்க் அவுட் ஆனது என்று கோலி தெரிவித்தார். 
 

click me!