குல்தீப் யாதவை எடுக்க வேண்டிய அவசியம் இருந்தும் கூட அவரை எடுக்காதது ஏன்..? கேப்டன் கோலி விளக்கம்

By karthikeyan VFirst Published Oct 19, 2019, 1:00 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி நடந்துவரும் ராஞ்சி ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமான ஆடுகளம் என்றபோதிலும், அணியில் இருந்த குல்தீப் யாதவை சேர்க்காமல் நதீமை ஆடும் லெவனில் சேர்த்தது ஏன் என கேப்டன் விராட் கோலி விளக்கமளித்துள்ளார். 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

ராஞ்சி ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமான ஆடுகளம் என்பதால் இந்திய அணி கூடுதலாக ஒரு ஸ்பின்னருடன் களமிறங்கியுள்ளது. இந்திய அணியின் பிரைம் ஸ்பின்னர்களான அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருடன் அறிமுக வீரர் நதீமும் இணைந்துள்ளார். இஷாந்த் சர்மா நீக்கப்பட்டு நதீம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். 

குல்தீப் அணியில் இருந்தும் கூட அவர் எடுக்கப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திலும் குல்தீப், டெஸ்ட் போட்டிகளில் ஆடும் லெவனில் எடுக்கப்படவில்லை. ஸ்பின்னிற்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில், அஷ்வின் தான் இந்திய அணியின் பிரைம் ஸ்பின்னர் என்று அணி நிர்வாகம் உறுதியாக நம்புவதால், இந்தியாவில் ஆடும் போட்டிகளில் அஷ்வின் தான் ஆடுவார். அந்தவகையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அஷ்வினும் ஜடேஜாவும்தான் ஆடிவருகின்றனர். 

வெளிநாட்டு தொடர்களில் குல்தீப் யாதவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஜடேஜா தான் எடுக்கப்பட்டார். எனவே தொடர்ச்சியாக குல்தீப் யாதவ் ஓரங்கட்டப்பட்டு வருகிறார். 

ராஞ்சி ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமானது என்பதால் இஷாந்த் சர்மாவை நீக்கிவிட்டு குல்தீப் யாதவை சேர்க்காமல், ஏன் நதீமை சேர்த்தனர் என்ற கேள்வி எழும். அதற்கு கேப்டன் கோலி, டாஸ் போடும்போதே பதிலளித்தார். இதுகுறித்து கேள்விக்கு பதிலளித்த கோலி, குல்தீப் யாதவிடம் நேற்றே கேட்டோம். ஆனால் அவரது தோள்பட்டை அசௌரியம் இன்னும் சரியாகவில்லை என்றதால் நதீமை அணியில் சேர்த்தோம் என்று தெரிவித்தார். குல்தீப் யாதவ் முழு உடற்தகுதியுடன் இல்லாததால் நதீமை சேர்த்ததாக கேப்டன் கோலி கூறியிருந்தாலும், குல்தீப் யாதவ் ஓரங்கட்டப்படுகிறாரோ என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. 
 

click me!