இந்திய அணியில் 2 கேங் இருப்பது உண்மை தான்.. உறுதிப்படுத்திய இந்திய வீரர்

By karthikeyan VFirst Published Jul 13, 2019, 3:00 PM IST
Highlights

இந்திய அணியில் 2 கேங் இருப்பது உண்மைதான் என்பதை இந்திய வீரர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். 
 

இந்திய அணியில் 2 கேங் இருப்பது உண்மைதான் என்பதை இந்திய வீரர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக கருதப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. இந்திய அணியின் தோல்விக்கு பின்னர் பெரும் பூகம்பமே வெடித்துள்ளது. அணி தேர்வு, ராயுடு புறக்கணிப்பு, தோனியை ஏழாம் வரிசையில் இறக்கியது உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தபோது, தோனியை ஐந்தாம் வரிசையில் தினேஷ் கார்த்திக்கையும் அதன்பின்னர் பாண்டியாவையும் இறக்கியது கடும் விமர்சனத்துக்கும் சர்ச்சைக்கும் உள்ளாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் உலக கோப்பை அணியின் மாற்று வீரர்கள் பட்டியலில் இருந்த ராயுடுவை, 2 வீரர்கள் காயத்தால் விலகியும் அணியில் எடுக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணி நிர்வாகம் தன்னிச்சையாக எடுத்த முடிவுகள் குறித்து மக்களிடம் விளக்க வேண்டும் என்று கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். 

உலக கோப்பை தோல்வியை அடுத்து அணி மறு ஆய்வு செய்யப்படவுள்ளது. வினோத் ராய் தலைமையிலான பிசிசிஐ நிர்வாகக்குழு, கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் ஆகியோரிடம் சில கேள்விகளை முன்வைத்து பதில் பெற உள்ளதோடு, அணியின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து ஆலோசனையும் செய்யப்படவுள்ளது. 

இந்திய அணி நிர்வாகத்தில் சில தன்னிச்சையான முடிவுகள் எடுக்கப்படுவது அப்பட்டமாக தெரிந்துவிட்டது. இந்நிலையில், ரோஹித் மற்றும் கோலி தலைமையில் இந்திய வீரர்கள் இரண்டு கேங்காக பிரிந்திருப்பதாக ஒரு வீரர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

ரோஹித் சர்மா மற்றும் பும்ரா ஆகிய இருவரும் டாப் பிளேயர்ஸ் என்பதால் அவர்கள் இருவரையும் அணியிலிருந்து ஓரங்கட்டமுடியாது. அவர்கள் இருவரையும் தவிர்த்து பார்த்தால், ராகுல், சாஹல் என கேப்டன் கோலிக்கு நெருக்கமான வீரர்கள் சரியாக ஆடவில்லை என்றாலும் அனைத்து போட்டிகளிலும் அணியில் இடம்பெற்றிருந்தனர். அதற்கு காரணம் கேப்டன் கோலி தன்னிச்சையாக தனது இஷ்டம் போல் செயல்படுவதுதான் என்று கூறப்படுகிறது. 

கேப்டன் கோலி, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழுவின் தலைவரான வினோத் ராயின் பேராதரவை பெற்றுள்ளதால் அவரது தன்னிச்சையான செயல்பாடுகளை நிர்வாகக்குழு கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேவுடன் கேப்டன் கோலி மோதல் போக்கை கடைபிடித்ததும் அதன்பின்னர் ரவி சாஸ்திரி பயிற்சியாளரனதும் அனைவரும் அறிந்ததே.

ஏற்கனவே இந்திய அணி உலக கோப்பையில் தோற்று வெளியேறியிருக்கும் நிலையில், இந்திய அணியில் 2 கேங்குகள் இருப்பதாக வெளிவந்துள்ள தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!